தமிழகத்தில் 85 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகின்றன
சென்னை: முதல் கட்ட எம்பிபிஎஸ் கவுன்சலிங்கின்போது தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க முடியாது தமிழகத்தில் 85 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகின்றன.
இதனால் இந்த ஆண்டு முதல் கட்ட கவுன்சலிங்கில் மொத்த இடங்கள் 1,483லிருந்து 1398 இடங்களாகக் குறைகின்றன.
முதல் கட்ட எம்பிபிஎஸ் கவுன்சலிங் வரும் 6ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரியில் மருத்துவக் கல்லூரி போதிய அடிப்படைக் கட்டமைப்பு இல்லாததால் மாணவர் சேர்க்கை கூடாது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் குறைபாடுகள் சரி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ள மாநில அரசின் கோரிக்கையையடுத்து இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் விரைவில் தர்மபுரி வந்து மீண்டும் ஆய்வு செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் இரண்டாம் கட்ட எம்பிபிஎஸ் கவுன்சலிங் தொடங்குவதற்குள் தர்மபுரி கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துவிடும் என மாநில அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
85 இடங்கள் குறைந்து போனதால் பொதுப் பிரிவு (31 சதவீதம்) இடங்கள் 460லிருந்து 433 ஆகக் குறைந்துள்ளன.
அதேபோல பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 393லிருந்து 370 ஆகவும் பிற்படுத்தப்பட்ட, முஸ்லிம்களுக்கான இடங்கள் 52லிருந்து 49 ஆகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 297லிருந்து 280 ஆகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 225லிருந்து 213 ஆகவும் தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினருக்கான இடங்கள் 41லிருந்து 39 ஆகவும் பழங்குடி வகுப்பினருக்கான இடங்கள் 15லிருந்து 14 ஆகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications