ஜெ.வை போல எங்களுக்கு கஞ்சா கேஸ் போடத் தெரியாது-துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை மிரட்டிய மத்திய அமைச்சரின் பெயரை வெளியிடக் கோரி இன்று அதிமுக, மதிமுக, பாமக, மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை மத்திய அமைச்சர் மிரட்டிய பிரச்சனையை அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:

செங்கோட்டையன்: நீதிக்காக மக்கள் நம்புகின்ற கடைசி புகலிடமான நீதித்துறையையே மிரட்டுகின்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கண்டித்துள்ளார். அகில இந்திய அளவில் பல்வேறு தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விஷயத்தில் அரசு மெளனம் சாதிப்பது ஏன்?.

பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி: நாடு முழுவதும் இன்று இந்த விஷயம் தான் பரபரப்பாக பேசப்படுகின்ற ஒரு அதிர்ச்சி செய்தியாகி இருக்கிறது. நீதிபதிக்கே பாதுகாப்பற்ற நிலை இருப்பதால் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?.

மார்க். கம்யூ. எம்எல்ஏ பாலபாரதி: ஐகோர்ட் தலைமை நீதிபதி மூலம் சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் தகவல்களைப் பெற்று அவற்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய கம்யூ. எம்எல்ஏ சிவபுண்ணியம்: சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சரை பிரதமரே அழைத்து கண்டித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், இங்கு அந்த அமைச்சர் யார் என்றே தெரியாது என்று கூறுகிறார்கள். இதில் அரசின் நிலை என்ன?.

சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்: மத்திய அமைச்சர் ஒருவர் தன்னை மிரட்டியதாக ஒரு நீதிபதி சொன்னதாக செய்திகள் வந்துள்ளன. அந்த நீதிபதியே தன்னை மிரட்டிய அமைச்சரின் பெயரை சொல்லவில்லை. இந் நிலையில் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இங்கு பேசியவர்களை விட நீதித்துறை மீதும், நீதிபதிகள் மீதும் இந்த அரசுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எங்களுக்கோ இந்த அரசுக்கோ நீதிபதிகளை மிரட்டத் தெரியாது.

(ஜெயலலிதாவைப் போல) நீதிபதியின் மருமகன் மீது எங்களுக்கு கஞ்சா வழக்கு போடத் தெரியாது. கார் ஏற்றி கொல்ல முயற்சிக்கத் தெரியாது. நீதிபதிகள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா? அவர்களும் மனிதர்கள் தானே என்று முன்னாள் முதல்வர் பேசியதைப் போல எங்களுக்கு பேசத் தெரியாது.

நீதிபதிகள் சில நேரங்களில் பேசக் கூடாததை எல்லாம் பேசுகிறார்கள். அதுபற்றி நாங்கள் பேசினால் எங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுகிறார்கள். நீதிபதிகள் என்றால் எதுவேண்டுமானாலும் அவர்கள் பேசலாமா? என்று இந்த மன்றத்தில் முன்னாள் முதல்வர் (ஜெயலலிதா) பேசியதைப் போல எங்களுக்கு பேசத் தெரியாது.

அதுமட்டுமல்ல நீதிமன்றங்களுக்கு நீங்கள் (அதிமுகவினர்) என்ன மரியாதை செய்வீர்கள் என்பதை சுப்பிரமணிய சுவாமி விஷயத்திலேயே (அதிமுக மகளிரணியினர் சேலையை உயர்த்திக் காட்டியது) தெரிந்தது. டெட்டால் ஊற்றி கோர்ட் வளாகத்தை கழுவும் அளவிற்கு அசிங்கப்படுத்தினீர்கள். எனவே நீதிமன்றத்தைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசட்டும், ஆனால் அதுபற்றி அதிமுக பேசக்கூடாது என்றார்.

அமைச்சர் துரைமுருகனின் இந்தப் பேச்சுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து அதிமுக உறுப்பினர்களும் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதனால் சட்டசபையில் குழப்பமும் சலசலப்பும் அமளியும் ஏற்பட்டது.

அப்போது இடைமறித்துப் பேசிய துரைமுருகன்: ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நீங்கள் (அதிமுக) வெளியே போக முயற்சிக்கிறீர்கள். எனவே இன்றும் சீக்கிரம் நீங்கள் போகலாம்.

செங்கோட்டையன்: அமைச்சர் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட முயற்சிக்கிறார்...

அப்போது இடைமறித்த அமைச்சர் பொன்முடி: அமைச்சர் துரைமுருகன் பொருத்தமான பதிலைத்தான் தெரிவித்துள்ளார். நீதிபதியே அமைச்சரின் பெயரை சொல்லாத போது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?.

தொடர்ந்து செங்கோட்டையன் பேச முயல அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக மதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இந் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம் எழுந்து, பாதிக்கப்பட்ட நீதிபதியே பெயர் சொல்லாத நிலையில், எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கேட்டிருக்கிறார். எதையாவது சொல்லி அதிமுகவினர் வெளிநடப்பு செய்ய முயற்சிக்கிறர்கள். அவர்கள் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

அப்போது இது குறித்துப் பேச பாமக வாய்ப்பு கேட்க அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பேச முயற்சித்தனர். அமைச்சரின் பதில் உரைக்கு பின்பு பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் கூறிவிடவே அவர்களும் வெளிநடப்பு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+