பட்ஜெட் எதிரொலி: பங்கு சந்தையில் பெரும் சரிவு
மும்பை: பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதால், பங்குச் சந்தை பெரும் சரிவுக்குள்ளானது.
பிற்பகல் ஒரு மணிக்கு 713 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ். நிப்டியிலும் சரிவுப் போக்கே தொடர்ந்தது.
கடந்த சில ஆண்டுகளாக தனியார் துறையினருக்கு அரசு நிறுவனங்களை தாரை வார்க்கும் திருப்பணியை மத்திய அரசுகள் செய்து வந்தன. குறிப்பாக வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், அரசுத் துறை முதலீடுகளை விலக்கிக் கொள்வதற்காகவே ஒரு தனி அமைச்சரவை உருவாக்கப்பட்டது. உலகில் எந்த பெரிய நாடும் செய்யாத 'சாதனை" இது!
இந்தப் பணியை காங்கிரஸ் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அவரது விசுவாசத்துக்குரிய ப சிதம்பரம் ஆகியோர் தொடர்ந்து செய்து வந்தனர்.
இந்த நேரம் பார்த்து உலகப் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. இதற்கு தனியார் துறையினரின் பொறுப்பற்ற தன்மை மற்றும் ஊழல்தான் காரணம் என அந்தந்த நாட்டு அரசுகள் குற்றம் சாட்டின. தொழில்துறையில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளே, வேறு வழியின்றி மக்கள் பணத்தை தனியார் துறையில் முதலீடு செய்து அந்த நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டியதாயிற்று.
இதைப் பார்த்த பிறகு சுதாரித்துக் கொண்ட இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இந்திய பொருளாதாரம் இந்த வீழ்ச்சிக் காலத்தில் ஸ்டெடியாக நிற்கக் காரணம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களே என்று சமாளித்தார்.
இந்த எண்ணம்தான் இப்போது பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் அரசு நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டுக் கழகங்கள் போன்றவை தனியாரின் கைகளுக்குப் போகாது என்றும், தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும் என்றும் பிரணாப் முகர்ஜி இன்றைய பட்ஜெட்டில் தெரிவிக்க, அதுவரை ஏறுமுகத்தில் இருந்த மும்பை பங்குச் சந்தை, சரேலென வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது.
வங்கித் துறைப் பங்குகள் மற்றும் ஐடி பங்குகள் மட்டும் ஓரளவு தப்பித்தன. மற்றவை பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன.
பிற்பகல் 1 மணிக்கு 713 புள்ளிகளை இழந்த சென்செக்ஸின் வீழ்ச்சி சற்றே மட்டுப்பட்டது. இப்போது 627 புள்ளிகள் இழப்புடன் சென்செக்ஸில் வர்த்தகம் நடக்கிறது.
நிப்டியில் 168 புள்ளிகள் சரிந்துள்ளன.


Click it and Unblock the Notifications
