கருணாநிதி தலைமையில் திரள்வது காலத்தின் கட்டாயம்-வீரமணி
சென்னை: ஈழத் தமிழர்களை காப்பாற்றிட முதல்வர் கருணாநிதி எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் தமிழர்கள் ஓரணியில் நிற்பது காலத்தின் கட்டாயம் ஆகும் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் ஈழத் தமிழர்கள் ஆடு, மாடுகளை போல் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது. ராஜபக்சே அரசு அவர்களை அடியோடு கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறது.
கைதிகளைவிட மோசமான நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இலங்கை குடிமக்களான ஈழத் தமிழர்களின் ரத்தமும், வியர்வையும் தான் அந்த நாட்டை செழிப்பாக மாற்றியது.
ஆனால், அது குறித்து எந்த கவலையும் இல்லாமல் அவர்களை போர் கைதிகளை போல முகாம்களில் நிரந்தரமாக தங்கவைக்க ரகசிய முயற்சிகளை இலங்கை அரசு செய்து வருகிறது.
மனிதநேயமுள்ள உலக நாடுகளை வற்புறுத்தி அழுத்தம் கொடுத்து முகாம்களில் முடக்கப்பட்டு உள்ள தமிழர்களை விடுதலை செய்ய வற்புறுத்திட வேண்டும்.
வணங்காமண் கப்பலின் பொருட்களை வற்புறுத்தி அனுப்பி வைத்து, ஈழத்தமிழர்கள் மீது தனக்குள்ள கவலை, இனமான அடிப்படையிலானது, இயல்பானது. தேர்தல் நேரத்தில் திடீரென முளைத்துக் கிளம்பி, பிறகு காணாமற் போகும் உணர்வு அல்ல. நிரந்தரமானது என்பதை முதல்வர் கருணாநிதி சட்டசபையில் உணர்த்தினார்.
தற்போது இலங்கை அரசு, இந்தியாவுக்கே சவால்விடும் ஆபத்தான நிலை ஏற்பட்டு உள்ளது. இதை இந்திய அரசு உணர வேண்டும். ஈழத் தமிழர்களை காப்பாற்றிட முதல்வர் கருணாநிதி எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் தமிழர்கள் ஓரணியில் நிற்பது காலத்தின் கட்டாயம் ஆகும் என அந்த அறிக்கையில் வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications