நாளை எகிப்தில் மன்மோகன்-கிலானி சந்திப்பு
பாரிஸ்: எகிப்தில் நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி சந்திக்கவுள்ள நிலையில் மும்பை தாக்குதல் குறித்து 36 பக்க புதிய அறிக்கையை இந்தியாவிடம் அந்த நாடு ஒப்படைத்துள்ளது.
அதில் தாக்குதல் குறித்து தாங்கள் நடத்திய விசாரணைகள் குறித்த விவரங்களை பாகி்ஸ்தான் அரைகுறையாக விளக்கியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் வழக்கில் புதிதாக 12 பேரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளை சந்தித்த அந் நாட்டு ராணுவ உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் தலைவர் இந்த விவரங்களை சமர்பித்தார்.
தாக்குதல் நடந்து 8 மாதங்களாகியும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவோ, விசாரணையை துரிதப்படுத்தவோ பாகிஸ்தான் தரப்பு இதுவரை ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர்கள் மட்டத்தில் பேச்சு நடத்த வேண்டுமானால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா நிபந்தனை விதித்ததால் பெயருக்கு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது பாகிஸ்தான்.
அந்த விவரங்களைத் தான் இந்தியாவிடம் சமர்ப்பித்துள்ளது.
வழக்கில் முக்குய குற்றவாளியான லஷ்கர்-ஏ-தொய்பாவின் தலைவர் ஷாகீர் ரஹ்மான் லக்வி மீதான விசாரணை 3 முறை ஒத்திவைக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. காரணம், அவரை விசாரி்க்கும் நீதிமன்றத்திற்கு நீதிபதியே நியமிக்கப்படவி்ல்லை.
அதே போல மும்பை தாக்குதலை திட்டமிட்ட லஷ்கரின் நிறுவனரும் ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவருமான ஹவீஸ் முகம்மத் சயீதை அந் நாட்டு நீதிமன்றம் விடுவிடுவித்துவிட்டது. இதை எதிர்த்து பாகிஸ்தான் அப்பீல் மனு தாக்கல் செய்யாதது மட்டுமல்லாமல் அவர் மீதான வழக்கையே வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மன்மோகன் சிங் உடனான தான் நடத்தவுள்ள பேச்சு குறித்து கருத்துத் தெரிவி்த்துள்ள கிலானி,
இரு நாடுகளும் சிக்கலைத் தீர்க்க முயல வேண்டும். அதைவிட்டுவிட்டு பிரச்சனையை பெரிதாக்க முயற்சிக்கக் கூடாது என்றார்.
ஆனால், இருநாட்டு பிரதமர்களும் நாளை சந்தித்து பேசினாலும் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை தொடங்குமா என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. மும்பை தாக்குதல் சம்பவம் நடந்த 8 மாதங்களுக்கு மேல் ஆகியும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் மெத்தனம் காட்டி வருவது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் சிறப்பு இயக்குனர் யு.கே.பன்சால் கூறுகையில்,
மும்பையில் தாக்குதல் சம்பவத்துக்கு பின், பாகிஸ்தான் தனது எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் எல்லைக்குள், கண்காணிப்பு கோபுரங்கள், பதுங்கு குழிகள் ஆகியவற்றை அமைத்து வருகிறது. இதற்கு இந்தியா சார்பில் பலமுறை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் பாகிஸ்தான் தனது செயல்களை நிறுத்தவில்லை.
பாகிஸ்தான் எல்லையில் அமைக்கப்பட்டு உள்ள பதுங்கு குழிகள், கண்காணிப்பு கோபுரங்களை அகற்றாவிட்டால், அது இந்தியாவுக்கு பாதகமாக அமையும்.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியால் கோட்டில் இருந்து, இந்திய எல்லைக்குள் ரகசியமாக சுரங்க பாதை அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. இதை லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் அமைப்பதாகத் தெரிகிறது. இது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் தடுக்க வேண்டும் என்றார்.
இப்படிப்பட்ட சூழலில் தான் மன்மோகன் சிங்கும் கிலானியும் நாளை எகிப்தி்ல் சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தின் ஷ்ராம்-எல்-ஷேக் நகரில் நடக்கும் அணி சேரா நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க இரு நாட்டுத் தலைவர்களும் அங்கு சென்றுள்ளனர்.
அங்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் மன்மோகன் சிங் சந்திக்கிறார்.
பாரிஸில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங், நேரடியாக எகிப்து சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications