40,000 கனஅடி நீர் திறப்பு-காவிரியில் வெள்ளம்!

காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பாகமண்டலா உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
மைசூர் மாவட்டம் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணையில் நீர்மட்டம் 2,282.15 அடியைத் தொட்டுவிட்டது. இதன் மொத்த கொள்ளவு உயரம் 2,284 அடியாகும். இந்த அணை முழுமையாக நிரம்ப இன்னும் 2 அடி நீர் மட்டுமே பாக்கியுள்ளது. எந்த சமயத்திலும் அணை நிரம்பிவிட வாய்ப்புள்ளது.
இந் நிலையில் அணைக்கு வினாடிக்கு 35,500 கன அடி வீதம் தண்ணீர் வந்ததால் அதிலிருந்து வினாடிக்கு 35,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரி பாசனப் பகுதியில் உள்ள பெரிய அணையான கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 98.90 அடியாக உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளவு உயரம் 124.80 அடி.
அணைக்கு வினீடிக்கு 17,472 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தால் அணையிலிருந்து வினாடிக்கு 4,448 கன அடிவீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர் முழுவதும் மேட்டூரை அடைய உள்ளது.
மழை மேலும் தீவிரமானால் இந்த இரு கர்நாடக அணைகளில் இருந்தும் இன்னும் அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications