மது ஒழிப்பு, கல்வி, நீர்..பாமக மும்முனை போராட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு, சமச்சீர் கல்வி, ஆற்று நீர் உரிமம் ஆகிய பிரச்சினைகளை மையமாக வைத்து பாமக மும்முனைப் போராட்டம் நடத்தப் போவதாக அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழ்நாட்டின் நலனுக்காக பாமக மும்முனை போராட்டம் நடத்தவுள்ளது. பூரண மது விலக்கு, சமச்சீர் கல்வி, ஆற்று நீர் உரிமம் ஆகிய பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த போராட்டம் நடத்தப்படும்.
முதல் கட்டமாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயத்தக் கூட்டம் நடத்தப்படும். போராட்டம் நடத்தும் தேதி மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்படும்.
மது விலக்கை படிப்படியாக கொண்டு வருவதாக முதல்வர் கூறினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஏற்கனவே 3 ஆலைகளுக்கும், இப்போது 6 ஆலைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் கல்வி தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தனியார் பள்ளிகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு சமச்சீர் கல்விதான் அரு மருந்தாகும்.
2008-ம் ஆண்டு சமச்சீர் கல்வியை கொண்டு வருவதாக கூறி விட்டு இப்போது இது கொள்கை முடிவு என்று கூறி கைவிடப்படுகிறது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications