தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு 'சூப்பர்': கருணாநிதி
சென்னை: தமிழகத்தி்ல் சட்டம்-ஒழுங்கு மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக முதல்வர் கருணாநிதி கூறினார்.
சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்புத்துறைகள் தொடர்பான கொள்கை விளக்கக் குறிப்புகளை முதல்வர் கருணாநிதி சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மக்களின் தொண்டில் 150வது ஆண்டை கொண்டாடும் தமிழ்நாடு காவல் துறை கடந்த ஆண்டு மாநிலத்தில் பெரிய அளவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏதும் நிகழாமல் காத்து சிறப்பாக செயல்பட்டுள்ளது.
பல்வேறு சமயங்கள் சார்ந்த திருவிழாக்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், முக்கிய நபர்களின் வருகைகள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.
தொழிலாளர்களும், விவசாயிகளும் அமைதியாக வாழ்கின்றனர்.
கொடைக்கானல் வனப்பகுதியில் பயிற்சி முகாம் அமைக்க முற்பட்ட இடதுசாரி தீவிரவாதிகளின் முயற்சிகளை போலீசார் முறியடித்தனர். சரியான நேரத்தில் 22 பேரை கைது செய்து அவர்களில் 12 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததால் சீர் குலைவு முயற்சிகளை போலீசார் தடுத்துள்ளனர்.
கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர் தின மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டதும், மும்பையில் நடைபெறுவதாக இருந்த இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி சென்னைக்கு மாற்றப்பட்டதும், தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுவதற்கு சான்றாக கூறலாம்.
சமூக விரோதிகள், போக்கிரிகள் மீதும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதும் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து சாதுர்யமாக கையாண்டதால் மாநிலத்தில் முழு அமைதி நிலவுகிறது.
கடந்த ஆண்டு மாநிலத்தில் பெரிய அளவில் ஜாதி மோதல்கள் எதுவும் நடக்கவில்லை.
நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டதால் தீவிரவாத செயல்கள் தமிழகத்தில் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழக விடுதலை இயக்கம், இந்திய கம்யூனிஸ்டு (மாவோயிசம்) போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகள் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
அகதிகள் என்ற போர்வையில் இலங்கையை சேர்ந்த தீவிரவாதிகள் அகதிகள் முகாம்களில் ஊருடுவாமல் தடுக்க அகதிகள் முழுமையாக சோதனை செய்யப்படுகின்றனர்.
தமிழக காவல் துறையை நவீன மயமாக்கும் பணி ஒரு தொடர் நடவடிக்கையாகும். கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.500 கோடி காவல் துறை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக செலவிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை வளர்க்க காவல்துறை தொடர்ந்து பாடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications