முதலமைச்சர் விஜய்யை பார்க்க போன டி.கே.கலா.. கில்லி பட நடிகைக்கே இந்த நிலைமை? சென்னையில் என்ன நடந்தது
சென்னை: பிரபல நடிகை டிகே கலா, இன்று முதலமைச்சர் விஜய்யை சந்திக்க தலைமைச் செயலகத்துக்கு சென்றுள்ளார்.. ஆனால், அவரை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.. இதனால் தலைமை செயலகத்திலேயே காத்து கிடந்த டிகே கலா, அங்கிருந்த செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. இந்த பேட்டி சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பிரபல நகைச்சுவை மூத்த நடிகை சண்முகசுந்தரியின் மகளான டி.கே.கலா, ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்ததால் இயல்பாகவே கலை உணர்வை கொண்டிருப்பவர்.

சின்ன வயதிலிருந்தே பாட்டு மீது டிகே கலாவுக்கு அதிகமான ஈடுபாடு இருந்தது.. இந்த ஈடுபாடுதான் அவரை பின்னணிப் பாடகியாக மாற்றியது. புகழ்பெற்ற இயக்குநர் ஏ.பி.நாகராஜன், டிகே கலாவின் இசைத் திறமையைக் கண்டறிந்து, 'அகத்தியர்' என்ற படத்தில் பாடும் வாய்ப்பை வழங்கினார். அந்த படத்தில் டிகே கலா பாடிய "தாயிற் சிறந்த கோயிலுமில்லை" என்ற பாடல், பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது..
டிகே கலா யார் தெரியுமா
இந்த பாட்டுதான் டிகே கலாவை உலகிற்கும் அடையாளம் காட்டியது.. காலம் கடந்த கிளாசிக் பாடலாக இன்றும் அந்த பாட்டு இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு பிறகு, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி ஜாம்பவான்கள் நடித்த படங்கள் பலவற்றிலும் டிகே கலா சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
எம்ஜிஆர் நடித்த பல்லாண்டு வாழ்க படத்தில் "போய்வா நதியலையே" பாடல், டூயட் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் "குளிச்சா குற்றாலம் கும்பிட்டா பரமசிவம்" பாடல், கிழக்குச் சீமையிலே படத்தில் "எதுக்கு பொண்டாட்டி" பாடல் என எண்ணற்ற பாடல்களை பாடினார் டிகே கலா.
குருவி படத்தின் பிரபல நடிகை
பின்னணிப் பாடகியாக மட்டுமே மக்கள் மத்தியில் அறியப்பட்ட டி.கே.கலா, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையையும் நிரூபித்துக் காட்டினார். அந்தப் படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜின் அம்மாவாக நடித்து, யதார்த்தமான கேரக்டரால், சினிமா ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டார்..
அதற்கு பிறகு, குருவி, மச்சக்காரன் உள்ளிட்ட நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து, தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர் டிகே கலா ஆவார்..
இளையராஜா சான்ஸ் தரலயே
சமீபத்தில் கூட டிகே கலா பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், "நிறைய மியூசிக் டைரக்டர்களிடம் பாடியிருக்கிறேன். ஆனால் இளையராஜா சார் எனக்கு வாசித்து இருக்கிறாரே தவிர அவருடைய இசையில் எனக்கு வாய்ப்பு கொடுக்கல. அவருக்கு எனக்கு வாய்ப்பு கொடுக்க இஷ்டமில்லை என்று நான் நினைக்கிறேன். எத்தனையோ மொழி நடிகைகளுக்கு அவர் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். எனக்கு இதுவரைக்கும் வாய்ப்பு தரவில்லை" என்று வருத்தத்துடன் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது டிகே கலா மீண்டும் ஒரு பேட்டியை தந்திருக்கிறார்.சென்னையில் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்திக்க சென்றிருக்கிறார் டிகே கலா... ஆனால், முதலமைச்சரை சந்திக்க முறையான அனுமதி பெறாததால், போலீசார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை என தெரிகிறது.
தம்பியை வாழ்த்த வந்தேன்
இந்நிலையில், அங்கிருந்த செய்தியாளர்களிடம் டிகே கலா பேசும்போது, குருவி படத்தில் அம்மாவாக நடித்திருக்கிறேன். கில்லி படத்திலும் தம்பி விஜய்யுடன் நடித்திருக்கிறேன்.. நாங்கள் அவங்களுக்கு குடும்ப நண்பர்கள் என்று சொல்லலாம்.. ஏனென்றால் எங்க ஏரியாவில்தான் தம்பி வளர்ந்தது.. இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உள்ளார்.. குடும்ப நட்பு காரணமாக தம்பியை வாழ்த்திவிட்டு போகலாம் என்று வந்தேன்.
சீரான, நேர்மையான, ஆட்சியை நடத்தி கொண்டிருப்பதை தமிழக மக்கள் வெளியிலிருந்து பார்த்து பாராட்டி கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தம்பியை வாழ்த்த வந்தேன்.. அதுக்கு எனக்கு வயதும் உள்ளது. வாழ்த்து சொல்லதான், காலையிலிருந்து இங்கே வந்து அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் தம்பியை இன்னும் பார்க்க முடியல. காத்து கொண்டிருக்கிறேன்.. எப்படியாவது இன்று சந்தித்து பேசி, வாழ்த்து சொல்லிவிடுவேன்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications