சட்டசபை: சிபிஎம்-சிபிஐ எம்எல்ஏக்கள் வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் இருந்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் இன்று அவைக் காவலர்களால் குண்டுக் கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

சபாநாயர் ஆவுடையப்பன் தங்களுக்கு பேச அனுதி தருவதில்லை என்று மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் வெள்ளிக்கிழமை சட்டசபைக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

இது குறித்து இன்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்தார். அவர் கூறுகையில், மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதியும், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியமும் கடந்த 17ம் தேதி சட்டமன்றத்திற்கு வெளியே தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக அவர்கள் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்திருக்கிறேன். இதனை உரிமை குழுவுக்கு அனுப்பி வைக்க அனுமதி கோருகிறேன்.

சபையை எத்தனை நாட்கள் நடத்துவது, உறுப்பினர்கள் பேச எவ்வளவு நேரம் ஒதுக்குவது என்பதெல்லாம் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் அதிமுகவுக்கு 25 நிமிடமும், காங்கிரசுக்கு 20 நிமிடமும், பாமகவுக்கு 15 நிமிடமும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 10 நிமிடமும் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக ஆகிய கட்சிகளுக்கு தலா 7 நிமிடமும் ஒதுக்குவது என தீர்மானிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தேசிய கட்சிகள் என்ற அடிப்படையில் அவர்கள் அன்றாடம் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்று பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதல்வரே சில நேரங்களில் தாமே முன்வந்து கூடுதல் நேரம் ஒதுக்க பரிந்துரை செய்திருக்கிறார். உறுப்பினர்கள் சிலர் எவ்வளவு நேரம் பேசினாலும் திருப்தி அடையாமல் அவையின் நேரத்தை கருதாமல் தாங்கள் மட்டும் பேசினால் போதும் என்ற கருத்தோடு பேசுகிறார்கள்.

சபாநாயகர் கொடுத்த நேரத்தையும் கடந்து பேசிவிட்டு வெளியே போய் சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்புகிறார்கள். பேச்சுரிமையை சபாநாயகர் பறித்து விட்டதாகக் கூறி அவையின் உரிமையை மீறுகிறார்கள்.

கடந்த 17ம் தேதி பாலபாரதி 19 நிமிடமும், சிவபுண்ணியம் 12 நிமிடமும் பேசிவிட்டு வெளியே சென்று 'பறிக்காதே, பறிக்காதே, பேச்சுரிமையை பறிக்காதே", 'நசுக்காதே, நசுக்காதே ஜனநாயக உரிமையை நசுக்காதே" என்று சபாநாயகருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார்கள்.

அத்துடன் ஆளுங்கட்சியான திமுக மற்றும் காங்கிரசுக்கு மட்டுமே சபாநாயகர் கூடுதல் நேரம் ஒதுக்குவதாகவும் தாங்கள் பேச போதிய வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் சில கட்சிகளை பேசவே அனுமதிப்பதில்லை என்றும் அவர்கள் கூறி இந்த அவையின் உரிமையை மீறிய செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றார் வீராசாமி.

அப்போது பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், நானும் இதனை பத்திரிகைகளில் பார்த்தேன். மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது இதில் உரிமை மீறல் தெரிகிறது. எனவே அவை விதி 226ன் படி இதை உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார்.

இதயடுத்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் அவர்களுக்கு ஆதரவாக அதிமுக, பாமக உறுப்பினர்களும் எழுந்து கூச்சலிட்டனர்.

பாமக எம்எல்ஏ வேல்முருகன் பேசுகையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லையே என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்கள் அன்பழகனும், ஆற்காடு வீராசாமியும் அப்படி நோட்டீஸ் அனுப்ப தேவையில்லை என்றனர்.

தொடர்ந்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் சபாநாயகருக்கு எதிராக உரத்த குரலில் கோஷம் எழுப்பினர். அவர்களை சபாநாயகர் எச்சரித்தும் பயன் ஏற்படாததால் அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.

மகேந்திரனும், சிவபுண்ணியமும் வெளியேற மறுத்ததால் அவர்களை அவை காவலர்கள் குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர். பெண் உறுப்பினர்களை பெண் காவலர்கள் வெளியேற்றினர்.

பாமக வெளிநடப்பு:

இந் நிலையில் சட்டசபையில் இருந்து பாமக இன்று வெளிநடப்பு செய்தது. காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தபோது பாமக எம்எல்ஏ வேல்முருகன் எழுந்து,

கடந்த காலங்களில் முதல்வரின் துறை மீதான 2ம் நாள் விவாதத்தில் பாமக பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று பேச அனுமதி உண்டா, இல்லையா என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஆவுடையப்பன், ஏற்கனவே உங்களுக்கு இந்த விவாதத்தில் 15 நிமிடம் பேச அனுமதி அளிக்கப்பட்டு நீங்கள் 17 நிமிடம் பேசியுள்ளீர்கள். இதனால் நேரம் கருதி பேச அனுமதி இல்லை என்றார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+