Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்தாரி-கிலானி மோதல்: குழப்பத்தில் பாக். அரசியல்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ஒரு பக்கம் தலிபான்களை எதிர்த்து பாகிஸ்தான் கடுமையாக போராடி வருகிறது. மறுபக்கம், அதை விட பேராபத்தாக, அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி இடையிலான மோதலும் வலுத்து வருவதால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு கூடியுள்ளது.

பெனாசிர் பூட்டோ மறைவுக்குப் பின்னர் திரைமறைவு அரசியலிருந்து வெளியே வந்தார் ஆசிப் அலி சர்தாரி. தனது மகனை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக்கிய சர்தாரி, கட்சியை தன் பொறுப்பில் எடுத்துக கொண்டார்.

தனக்கு விசுவாசமாக இருக்கக் கூடியவர் என்ற நம்பிக்கையில் யூசுப் ரஸா கிலானியை பிரதமர் பதவியில் அமர்த்தினார். சில காலம் கழித்து அதிபர் பதவியில் சர்தாரி அமர்ந்தார்.

அதுவரை எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் கிலானி 'டம்மி பீஸ்' ஆக இருப்பார் என நினைத்ததற்கு மாறாக, சுய மரியாதையை சற்றும் இழக்க விரும்பாமல், சர்தாரி தலையாட்டச் சொன்னதற்கெல்லாம் தலையை ஆட்டாமல் இருக்க ஆரம்பித்ததால் அதிர்ச்சி அடைந்தார் சர்தாரி.

இடையில் தலிபான்களின் தொடர் தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்தபோது அவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காமல் சொதப்பினார் சர்தாரி.

இதையடுத்து கிலானி நேரடியாக ராணுவத் தளபதியுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க ஆயத்தமானபோதுதான், தனது கரம் வலுவிழந்து போயிருப்பதை உணர்ந்தார் சர்தாரி. இதையடுத்து வேறு வழியில்லாமல் பிரதமர் மற்றும் ராணுவத்துடன் சமரசமாகப் போக முன்வந்தார்.

அதன் பிறகு அடுத்தடுத்து கிலானிக்கும், சர்தாரிக்கும் இடையிலான முட்டல்கள் மோதல்கள் வலுத்தபடி உள்ளன.

தற்போது பிரான்ஸ் நாட்டுக்கான தூதரை நியமிப்பதில் கிலானிக்கும், சர்தாரிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

மாவட்ட நிர்வாக குழு அதிகாரியான, அதிகம் பிரபலம் இல்லாத அதிகாரியான ஜெஹன்சேப் கான் என்பவரை பிரான்ஸ் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதராக நியமித்தார்.
அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டுக்காக கிலானி எகிப்து போயிருந்தபோது இந்த நியமனத்தை செய்தார் சர்தாரி.

இது கிலானியை ஆத்திரத்தில் மூழ்கடித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திலும் சர்தாரியின் நியமனத்திற்கு கடும் அதிருப்தி வெடித்துள்ளது. கானை விட சீனியர் அதிகாரிகள் இருக்கும் நிலையில் ஜூனியரை தூதராக நியமித்ததால் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் கடும் பூசல் வெடித்துள்ளது.

இந்த நிலையில் சர்தாரிக்கு ஆப்பு வைக்கும் வகையி்ல அவருக்கு நெருக்கமான சில அமைச்சர்களை தூக்க திட்டமிட்டுள்ளார் கிலானி. முதலில் சர்தாரிக்கு மிக நெருக்கமான மூன்று பேரைத் தூக்க அவர் தீர்மானித்துள்ளார்.

இதுகுறித்து கிலானி பாகிஸ்தான் டிவிக்கு அளித்த பேட்டியில், அமைச்சரவையை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளேன். திறமையின் அடிப்படையில் அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். யாருக்கும் ஆதரவாக இருப்பார்கள், இருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அமைச்சர்கள் இருக்கக் கூடாது என்றார்.

இப்படி பிரதமருக்கும் சர்தாரிக்கும் இடையில் மோதல் வலுத்து வரும் நிலையில் சர்தாரியின் செயல்பாடுகள், சொதப்பல் முடிவுகள், குளறுபடிகளால், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்களும் கூட அதிருப்தியுடன் உள்ளனராம்.

சர்தாரிக்கு நெருக்கமானவர்களுக்கே கட்சியில் முக்கியப் பதவிகள் தரப்பட்டுள்ளன. மூத்தவர்கள், அனுபவசாலிகள் ஓரம் கட்டப்பட்டுள்னர்.

சமீபத்தில், பெனாசிர் பூட்டோவுக்கு நெருக்கமானவர்களான அமைச்சர்கள் ரஸா ரப்பானி, ஷெர்ரி ரஹ்மான் ஆகியோர் பதவி விலகியதற்கும் கூட இந்த அதிருப்தியே காரணம் என்று கூறப்படுகிறது.

அதேபோல சமீபத்தில் இன்னொரு மோதலும் வெடித்தது. பாகிஸ்தானில் இப்போது வெகு பிரபலமாக இருப்பது சர்தாரி குறித்த எஸ்.எம்.எஸ். ஜோக்குகள்தான். சர்தாரியை குண்டக்க மண்டக்க விமர்சித்தும், நக்கலடித்தும் சரமாரியாக எஸ்.எம்.எஸ்.கள் உலா வருகின்றன.

இதனால் கடுப்பான சர்தாரியின் முக்கிய கூட்டாளியான உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், சர்தாரியை கிண்டலடித்து எஸ்.எம்.எஸ். அனுப்பினால் அவர்களுக்கு 14 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்தார்.

பிரமதரை கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதனால் கிலானி கோபமாகி விட்டார். ரஹ்மான் மாலிக்கின் அறிவிப்பைக் கண்டித்த அவர், அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் யாரும் எந்த அறிவிப்பையும் வெளியிடக் கூடாது. எந்த இமெயில், எஸ்.எம்.எஸ். குறித்தும் நான் கவலைப்படவில்லை, கவலைப்படவும் மாட்டேன் என்றார் அவர்.

கிலானியின் இந்த கண்டிப்பு, சர்தாரி தரப்பை மேலும் டென்ஷனாக்கியுள்ளது.

சர்தாரியின் அதிகாரங்களைக் குறைக்கும் முயற்சியிலும் கிலானி இறங்கியுள்ளாராம். முஷாரப் அதிபராக இருந்தபோது இருந்த அதிகாரங்கள் அனைத்தும் இப்போது சர்தாரியிடமும் உள்ளது. அவற்றைக் குறைத்து சர்தாரியை டமமி ஆக்க கிலானி முயற்சித்து வருகிறாராம்.

அதிபருக்கு அதிக அதிகாரங்களைத் தரும் அரசியல் சட்டத்தின் 17வது திருத்தத்தை திருத்தி புதிய மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

17வது சட்டத் திருத்தத்தை முன்பு முஷாரப் தனது டம்மி நாடாளுமன்றம் மூலம் கொண்டு வந்து வானளாவிய அதிகாரங்களைப் பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.

கிலானிக்கு தனது கட்சியினர் தவிர எதிர்க்கட்சி எம்.பிக்களிடமும் நல்ல செல்வாக்கு இருப்பதால் இந்த சட்டத் திருத்த மசோதா எளிதில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கிலானி கூறுகையில், சக்தி வாய்ந்த நாடாளுமன்றம் மற்றும் முழுமையான அதிகாரம் கொண்ட அமைச்சரை இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த லட்சியத்தை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப்பின் துணையுடன் அடைய முடியும் என நான் கருதுகிறேன் என்றார்.

நவாஸ் ஷெரீப், சர்தாரி இடையிலான உறவு முன்பு போல இல்லை. சர்தாரியின் போக்கால் பெரும் அதிருப்தியில் உள்ளார் ஷெரீப். இதைப் பயன்படுத்திக் கொண்டு சர்தாரியை டம்மி ஆக்க படு வேகமாக காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார் கிலானி. இதனால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு கூடியுள்ளது.

ரா அதிகாரிகளை சந்திக்க விரும்பும் ஐஎஸ்ஐ தலைவர்..

இதற்கிடையே, இந்திய உளவுப் பிரிவான ரா அமைப்பின் தலைவரை சந்திக்க ஐஎஸ்ஐ தலைவர் சுஜா பாஷா விருப்பம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்திய அதிகாரிகளை சந்தித்த அவர்,அப்போது இந்தக் கோரிக்கையை வைத்தார். ஆனால் இந்தக் கோரிக்கையை ஏற்பது குறித்து கவனத்துடன் இந்தியா பரிசீலித்து வருகிறதாம்.

தீவிரவாதம் தொடர்பான விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக இந்த சந்திப்பை விரும்புவதாக பாஷா தெரிவித்துள்ளார். ஆனால் பலுசிஸ்தான் விவகாரத்தை அப்போது ஐஎஸ்ஐ தலைவர் எழுப்பலாம் என இந்தியா சந்தேகிக்கிறது.

மேலும், ஐஎஸ்ஐ தலைவர், பாகிஸ்தான் ராணுவத்தின் கீழ் இயங்கி வருபவர். ஆனால் ரா தலைவர் அப்படியல்ல. அவர் ஒரு சாதாரண அதிகாரி அந்தஸ்தில் இருப்பவர்தான். எனவே இந்த சந்திப்புக்கு இந்தியா அனுமதி தராது என்று நம்பப்படுகிறது.

அணி சேரா நாடுகள் கூட்டமைப்புக்குப் பின்னர் பலுசிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தலையிடுவதாக கிலானி புகார் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். எனவே பாக் ஆதரவு தீவிரவாத செயல்களிலிருந்து தப்பிக்க பலுசிஸ்தான் விவகாரத்தை பாகிஸ்தான் பெரிதுபடுத்த விரும்புதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+