பெண் இன்ஸ்பெக்டரின் தற்கொலை மிரட்டல்!
தஞ்சை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட வல்லம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வசந்தா, தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த 11ம் தேதி தஞ்சையில் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் டிஎஸ்பி வசுந்தரா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தன்னை வசுந்தராவும், பல்கலைக்கழக காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்தரசும் தாக்கியதாக வல்லம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வசந்தா புகார் கூறினார்.
இதையடுத்து அவரை டிஐஜி அமித்குமார் சிங் சஸ்பெண்ட் செய்தார். இதற்கான உத்தரவுடன் சப்-இன்ஸ்பெக்டர் சர்புனிசா, இன்ஸ்பெக்டர் வசந்தாவின் வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு வசந்தா இல்லை.
இதையடுத்து அதை அவரது தாயாரிடம் சர்புனிதா கொடுத்து விட்டு சென்றார்.
இந்தத் தகவல் கிடைத்ததும் வசந்தா போலீசில் ஒரு புகார் செய்தார். அதில், தன்னுடைய வீட்டுக்குள் சர்புனியா அத்துமீறி நுழைந்து தனது தாயாருடன் தகராறு செய்ததாக புகார் கூறியிருந்தார்.
பின்னர் தஞ்சை பத்திரிகை நிருபர்களுக்கு போன் செய்த இன்ஸ்பெக்டர் வசந்தா தன்னை தாக்கிய டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்காமல் தன்னை சஸ்பெண்டு செய்திருப்பதால் தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார்.
பெண் இன்ஸ்பெக்டரின் இந்த தற்கொலை மிரட்டல் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications