பிரபாகரன் இருக்கிறார்-காடுகளில் புலிகள்: நெடுமாறன்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான உறுதியான தகவல் கிடைத்துள்ளது. புலிகளின் மூலப் போராளிகள் காடுகளுக்குள் பதுங்கியுள்ளனர். பிரபாகரனின் கட்டளைக்காக அவர்கள் காத்துள்ளனர். கிடைத்தவுடன் தாக்குதல் நடத்துவார்கள் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், உலகத் தமிழர் பேரவையின் தலைவருமான பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு சார்பில் நேற்று பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் ஈழத்தமிழரும்-நமது கடமையும்' என்ற கருத்தரங்கு நடந்தது.

பழ.நெடுமாறன் கலந்து கொண்டு கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது..

சிங்கள அரசு 6 மாதத்தில் மட்டும் 1 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது. சர்வாதிகாரி ஹிட்லரால் யூத மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதை விட மிகப்பெரிய கொடுமை இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்து உள்ளது. இந்தியாவில் வாழும் தமிழர்களை மத்திய அரசு நமது நாட்டின் குடிகளாக நினைக்கவில்லை.

ஏறத்தாழ 3.5 லட்சம் தமிழர்கள் ராணுவ கட்டுப்பாட்டில் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

3 ஆயிரத்து 500 பேருக்கு ஒரு கழிவறை வசதி மட்டுமே செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கெல்லாம் மத்திய அரசு தான் காரணம்.

தமிழர் பேரழிவுக்கு மலையாளிகளே காரணம்...

இலங்கை தமிழர் பேரழிவுக்கு காரணமாக இருந்தவர்களில் மலையாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன், இந்தியாவில் முக்கிய பதவி வகிக்கும் பி.கே.நாயர், ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் இந்திய பிரதிநிதி கோபிநாத், ஐ.நா.சபை பொதுச் செயலாளரின் விவகாரத்துறை அதிகாரி விஜய் நம்பியார், இலங்கை ராணுவ தளபதி பொன்சேகாவின் ராணுவ ஆலோசகரும் விஜய் நம்பியாரின் சகோதரருமான சதீஷ் நம்பியார் ஆகிய அனைவரும் மலையாளிகள்.

இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இந்த பேரழிவை ஏற்படுத்தி உள்ளனர்.

சிவசங்கர மேனனும், நாராயணனும் மாதத்துக்கு 4 தடவை இலங்கைக்கு சென்று வந்தனர். போர் நிறுத்தம் பற்றி பேசுவதாக இலங்கை சென்று டெல்லி திரும்பும் வழியில் சென்னையில் இறங்கி அவர்கள் தமிழக முதலமைச்சரையும் ஏமாற்றி விட்டனர்.

இலங்கையில் சீனா நாடுகள் உள்பட நமது எதிரி நாடுகள் கால்பதித்து வருகின்றன. இது நமது நாட்டு பாதுகாப்புக்கு பாதிப்பாக அமையும். இதை புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு தனது தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு உள்ளது.

பத்திரமாக இருக்கிறார் பிரபாகரன்...

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிகவும் நன்றாக உள்ளார். மிக பத்திரமாக இருக்கிறார். எந்த கட்டத்திலும் மீண்டும் தோன்றி தமிழீழ போராட்டத்துக்கு தலைமை தாங்கி போராடுவார். அதை அவரே அறிவிப்பார்.

பிரபாகரன் இறந்து விட்டார் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. விடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் பத்மநாபன், பிரபாகரன் இறந்ததாக செய்தி வெளியிடும் முன்பு என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவ்வாறு செய்தி வெளியிட நீங்கள் யார்? என்று கேட்டேன். எனது கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை.

நம்மை குழப்பவும், போராட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையிலும் பரப்பப்படும் பொய் செய்திகளை யாரும் நம்பக் கூடாது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று எனக்கு உறுதியான செய்தி களத்தில் இருந்து கிடைத்து உள்ளது.

தம்பி பிரபாகரன் தலைமையில் போராட்டம் முன் நிறுத்தப்படும். அப்போது உலக தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அதுவரை நாம் ஒன்று திரண்டு எந்த ஒரு குழப்பத்துக்கும் ஆளாகாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பிரபாகரனை பொறுத்தவரை எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். பிரபாகரன் வெளிவரும் வரை நாம் ஒன்றுப்பட்டு போராட வேண்டும்.

போராட்டத்துக்கு நாம் தோள் கொடுத்தால் பிரபாகரன் வெளிப்படும் நாட்கள் நெருங்கும். விடுதலைப்புலிகளின் மூலப்பலம் சிதைக்கப்படவில்லை. அவர்கள் காடுகளில் இருக்கிறார்கள். தலைவரின் உத்தரவு கிடைத்ததும் அவர்கள் வெளிப்படுவார்கள்.

தமிழர்கள் வசித்த பகுதிகளில் கன்னி வெடிகளை அகற்ற இந்திய ராணுவம் அனுப்பப்படுவதாக தகவல் கிடைத்து உள்ளது.

புலிகளை அழிக்கவே இந்திய ராணுவம் செல்கிறது..

காடுகளில் வாழ்ந்து வரும் விடுதலைப்புலிகளை அழிக்க தான் அவர்கள் அனுப்பப்படுகிறார்கள் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

போர் முடிவுக்கு வந்தபிறகும் நாடு முழுவதும் தமிழர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். பிரபாகரன் இறந்து விட்டார் என்று செய்தி வெளியான பிறகும் தமிழர்களின் எழுச்சி அடங்கவில்லையே என்று நினைத்த இந்திய அரசின் ரா' உளவுத்துறை திட்டமிட்டு பிரபாகரன் பற்றி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பி வருகிறது.

அவர் அப்படி கொல்லப்பட்டார், இப்படி கொல்லப்பட்டார், சித்திரவதைப்படுத்தி கொல்லப்பட்டார் என்றெல்லாம் ரா' உளவுப்பிரிவு மூலம் செய்திகள் பரப்பட்டு தமிழர்களை சஞ்சலப்படுத்தவும், குழப்பவும் முயற்சிக்கப்படுகிறது.

நமது நெஞ்சங்களில் துளி அளவுக்கூட சஞ்சலங்கள் இருக்கக்கூடாது. பிரபாகரன் நன்றாக, பத்திரமாக இருக்கிறார் என்பதில் யாரும் சந்தேகப்பட தேவையில்லை. குழப்பி விடும் செய்திகளை தூக்கி எறிந்து விட வேண்டும். எதிரிகளை விட குழப்பங்களை பரப்புபவர்கள் தான் அபாயகரமானர்கள்.

எத்தனையோ தடவை பிரபாகரன் என்னும் சூரியனை மறைக்க பகை மேகங்கள் முயற்சித்தன. அத்தனை மேகங்களையும் அவர் கிழித்து கொண்டு வெளிவந்தாரே தவிர மறைந்து போகவில்லை.

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத பயிற்சி கொடுக்கும் முகாம் நடப்பதாக ஆங்கில பத்திரிகை ஒன்று புகைப்படத்தை வெளியிட்டது.

இதை அறிந்த இலங்கை அதிபர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். அப்போது எம்.ஜி.ஆர். மூலம் இந்திரா காந்தி பதில் கடிதம் எழுதினார். தமிழகத்தில் முகாம் நடப்பது உண்மை தான், அது விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம் அல்ல, அகதிகளின் முகாம் என்று கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த பழைய வரலாறு எல்லாம் சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்குக்கும் தெரியுமா? அவர்களுக்கு சுதந்திர போராட்டம் என்றால் என்னவென்று தெரியாது. இந்தியாவும், பல்வேறு நாடுகளும் எப்படி சுதந்திரம் பெற்றது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

ஆயுதம் ஏந்தி போராடிய சுபாஷ் சந்திரபோசையும், பகத்சிங்கையும் தீவிரவாதிகள் என்று வெள்ளையர்கள் கூறினார்கள். ஆனால் அவர்களை நாம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று கூறி பெருமைப்படவில்லையா? அப்படியானால் சொந்த மண்ணுக்காக போராடிய விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா?.

விடுதலைப்புலிகள் சிங்களர்களால் தோற்கடிக்கப்படவில்லை. இந்தியா உள்பட 20 நாடுகள் நடத்திய போரால் அவர்கள் பின்னடைவை சந்தித்தார்கள்.

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வரப்பட்ட 10 கப்பல்களை இந்திய கடற்படை கடலில் மூழ்கடித்தார்கள். ஆயுத தட்டுப்பாடு காரணமாக பின்னடைவை சந்திக்க நேர்ந்தது.

போர் முடிவுக்கு வந்த நிலையில் தமிழர்கள் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டு அங்கு சிங்களர்கள் அவசர அவசரமாக குடியமர்த்தப்படுகிறார்கள். ஊர்களின் பெயரை சிங்கள பெயராக மாற்றி வருகிறார்கள்.

இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால் 40 தமிழக எம்.பி.க்களும் ராஜினாமா செய்வார்கள் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார். அதில் அவர் உறுதியாக இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது.

விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று இந்திய அரசு கூறுகிறது. விடுதலைப்புலிகள் எப்போதும் சிங்கள மக்களை கொல்லவில்லை. இலங்கை ராணுவத்தை குறி வைத்தே தாக்குதல் நடத்தினார்கள்.

ஒரு தடவை 12 விடுதலைப்புலிகள் மட்டுமே சென்று 28 விமானங்களை குண்டு வைத்து தகர்த்தார்கள். அப்போது ஒரு பயணிகளின் உயிருக்கு கூட பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்து கொண்டார்கள்.

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொழும்பு நகரில் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தார்கள். அவர்கள் பயங்கரவாதிகள் என்றால் அவ்வளவு தூரம் சென்று தாக்கியவர்கள் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவை தாக்கி இருக்கலாமே. அதை ஏன் அவர்கள் செய்யவில்லை.

இந்தியாவுக்கு எதிராக மட்டும் அல்ல, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நாடுகளிடம் அவர்கள் ஆயுதம் கூட பெறவில்லை என்றார் நெடுமாறன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+