'பலுசிஸ்தானில் இந்தியாவின் தலையீடு இல்லை'
டெல்லி: பலுசிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு ஒருபோதும் இருந்ததில்லை. இந்தியா தலையிட்டிருந்தால் எங்களது நிலை இப்படி மோசமாக இருந்திருக்காது என்று கூறியுள்ளார் லண்டனில் தஞ்சமடைந்துள்ள பலுசிஸ்தான் மன்னரின் வாரிசான சுலேமான் கான்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் குறித்து இந்தியா பேசினாலே, உடனடியாக பலுசிஸ்தானில் இந்தியா தீவிரவாதத்தை தூண்டி வருவதாக பாகிஸ்தான் புகார் கூறும்.
சமீபத்தில் கூட பலுசிஸ்தான் விவகாரத்தை இழுத்தது பாகிஸ்தான்.
ஆனால் பலுசிஸ்தானில் இந்தியாவின் தலையீடு இல்லை என்று பலுசிஸ்தான் தலைவர்கள் மறுத்துள்ளனர்.
இதுதுகுறித்து பலுசிஸ்தானின் கலாத் பகுதி மன்னரின் வாரிசான சுலேமான் கான் ரா, பலுசிஸ்தான் விவகாரத்தில் தலையிடவில்லை என்று கூறியுள்ளார். இவர் லண்டனில் தஞ்சமடைந்து அங்கு வசித்து வருகிறார்.
சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு சுலேமான் கான் அளித்துள்ள பேட்டியில், இந்தியா ஒருபோதும் பலுசிஸ்தான் விவகாரத்தில் தலையிட்டதில்லை.
இந்தியா தலையிட்டு தீவிரவாதத்தைத் தூண்டுவதாக உலக நாடுகளிடம் காட்ட பாகிஸ்தான் முயலுகிறது. ஆனால் இந்தியாவிடமிருந்து எங்களுக்கு உதவிகள் கிடைத்திருந்தால், நாங்கள் இந்த நிலையில் இருந்திருக்க மாட்டோம்.
உண்மை என்னவென்றால் பலுசிஸ்தான் தலைவர்கள் பலரும் இந்தியாவின் உதவியை விரும்புகின்றனர். ஆனால் இந்தியாதான் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
பலுச் போராட்டத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், பாகிஸ்தானி ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற உதவ வேண்டும் என பலுச் தலைவர்கள் கோரி வருகின்றனர். ஆனால் இந்தியா அதை ஏற்காமல் உள்ளது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அவர்கள் எங்களுக்காக குரல் கொடுத்தால் மிகப் பெரிய பலன்கள் ஏற்படும். குறைந்தபட்சம், பலுசிஸ்தானில் நடைபெறுவது சரியல்ல என்று கூறினால் கூட போதும். ஆனால் இந்தியா அந்த உதவியைக் கூட செய்யாமல் உள்ளது என்றார் சுலேமான் கான்.
பலுசிஸ்தான்...
பாகிஸ்தானின் எல்லைப்புற மாகாணம் பலுசிஸ்தான். ஈரான், ஆப்கானிஸ்தானையொட்டி உள்ளது. பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமும் இதுதான்.
மாகாணத் தலைநகர் குவெட்டா. பலூச்சி இனத்தவர் பெரும்பான்மையாக உள்ளனர். இயற்கை எரிவாயு இங்கு அதிகம். சிந்து மாகாணத்திற்குப் பிறகு இங்குதான் இயற்கை எரிவாயு அதிகம் கிடைக்கிறது.
பலுசிஸ்தானில் முன்பு மக்ரான், கரான், லாஸ் பெலா, கலாத் என நான்கு சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றை இங்கிலாந்து ஆட்சியாளர்கள் ஒன்று சேர்த்து ஒருங்கிணைந்த பலுசிஸ்தானை உருவாக்கினர்.
இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தான் உருவானபோது, பலுசிஸ்தான், பாகிஸ்தானுடன் சேரவில்லை. 1948ம் ஆண்டுதான் அது பாகிஸ்தானுடன் இணைந்தது.
பலுசிஸ்தானை தனி நாடாக்க வேண்டும், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட வேண்டும் என்று கோரி அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. பல்வேறு குழுக்கள் இந்தப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு இந்தியா மறைமுக ஆதரவு அளித்து வருகிறது என்பதுதான் பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றச்சாட்டாகும்.












Click it and Unblock the Notifications