பெரியார்: கி.வீரமணியின் மனு தள்ளுபடி- 'சுயமரியாதை கருத்துக்கள் அனைவருக்கும் சொந்தம்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை பெரியாரின் எழுத்துக்களை பெரியார் திராவிடர் கழகம் நூலாக வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

தந்தை பெரியாரின் எழுத்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் யாரும் தனிப்பட்ட முறையில் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் 1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை குடியரசு பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளையும், கருத்துக்களையும் தொகுத்து நூல்களாக வெளியிட கொளத்தூர் மணியை தலைவராகக் கொண்ட பெரியார் திராவிடர் கழகம் திட்டமிட்டது.

இதை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளராக நான் இருந்து வருவதால் தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை. இவற்றை வெளியிட எங்களுக்குத்தான் காப்புரிமை உள்ளது.

இதனால் எனவே, பெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கருத்துக்களை நூல்களாக தொகுத்து வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் வீரமணி.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம் பெரியார் திராவிடர் கழகம் நூல்களை வெளியிடுவதற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்தத் தடையை நீக்கக்கோரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கி இன்று உத்தரவிட்டார்.

இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளதாவது:

கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார். சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். தன்னுடைய கருத்துக்களை அவர் குடியரசு பத்திரிகையில் எழுதியுள்ளார்.

முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடையிலான மிகச் சிக்கலான காலக்கட்டத்தில் அவர் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டார். சமூக நீதிக்காக பலம் மிகுந்த காங்கிரசுக்கு எதிராகவும் அவர் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

தன்னுடைய கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். நூறு ஆண்டுக்கு பிறகும் இளைய சமுதாயத்தினர் அவருடைய கொள்கைகளை தெரிந்து கொள்வது நல்லது.

எனவே, பெரியாரின் கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும், யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது. காப்புரிமை என்ற பெயரில் அவரது கருத்துக்களை முடக்கவும் கூடாது. வழக்கு ஆவணங்களுக்கு இடையே அவரது கொள்கைகளை முடக்கி, அடைத்து விடக்கூடாது. அவரது கருத்துக்கள் அனைவருக்கும் சொந்தமானவை.

எனவே பெரியாரின் கருத்துக்களை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது. இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தனது உத்தரவில் கூறியுளளார் நீதிபதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+