டெல்லியில் பயங்கர தீவிபத்து: தாய், 4 குழந்தைகள் பலி
டெல்லி: டெல்லியில் நேற்று நள்ளிரவில் நடந்த பயங்கர தீவிபத்தில் தாயும், அவரது நான்கு குழந்தைகளும் பரிதாபமாக கருகி உயிரிழந்தனர்.
டெல்லியில் ஷாபாத் பண்ணை என்ற இடத்தில் சுரேஷ் என்பவரின் வீட்டில் நேற்று நள்ளிரவு வாக்கில் சுரேஷின் மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார். சுரேஷ் வெளியில் போயிருந்தார்.
அவரது நான்கு குழந்தைகள் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மின் அழுத்தம் காரணமாக திடீரென டிவி வெடித்துச் சிதறியது. இதையடுத்து தீ மண்ணெண்ணை ஸ்டவ்வில் பட்டு மளமளவென பரவியது.
இதில் வீடு முழுக்க தீ பரவி வீட்டுக்குள் இருந்த சுரேஷ், மனைவி, நான்கு குழந்தைகள் சிக்கிக் கொண்டனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை சிரமப்பட்டு அணைக்க முயற்சித்தனர். தகவல் அறிந்து தீயைணப்புப் படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பின்னர் குடிசைக்குள் போய் பார்த்தபோது, சுரேஷின் 2 வயது மற்றும் 5 வயது குழந்தை ஆகியவை கருகி இறந்து கிடந்தனர்.
சுரேஷின் மனைவி மற்றும் மேலும் 3 குழந்தைகள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இவர்களில் சுரேஷின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் இன்று அதிகாலையில் உயிரிழந்தனர்.
ஒரு குழந்தை மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது. இச்சம்பவத்தால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.
மார்க்கெட்டில் தீ - 7 கடைகள் சாம்பல்
அதேபோல தெற்கு டெல்லியில் உள்ள ஐஎன்ஏ மார்க்கெட்டில் இன்று அதிகாலையில் தீப்பிடித்தது. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டது. இதில் 7 கடைகள் எரிந்து நாசமாகின.
ஒன்றரை மணி நேரம் போராடி தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.












Click it and Unblock the Notifications