சந்தர்ப்பவாதிகளாக மாறி விட்ட சில தமிழக தலைவர்கள் - இலங்கை எம்.பி. சிவாஜி லிங்கம்
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த சில தலைவர்கள், சந்தர்ப்பவாதிகளாகி விட்டனர். இலங்கையில் நடைபெறும் தமிழினப் படுகொலையை இவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. சிவாஜி லிங்கம்.
சென்னை செங்குன்றத்தில் தமிழர் தன்மானப் பாசறை என்ற அமைப்பை சிவாஜிலிங்கம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், இங்குள்ள சில தலைவர்கள் இலங்கைத் தீவில் தமிழர்கள் படும் அவதிகளைக் கண்டும் காணாமல் உள்ளனர். இதில் வேதனை என்னவென்றால் இலங்கைத் தமிழர்களின் பாதுகாவலர்கள் நாங்கள் என்று இவர்கள் கூறி வருவதுதான்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். சர்வதேச சமுதாயம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
இலங்கையை கட்டாயப்படுத்தி போர் நிறுத்தம் செய்யுமாறு கூறுமாறு நாங்கள் வெளிநாடுகளை தொடர்ந்து வேண்டினோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து அமைதியாகவே இருந்து விட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் பறி போய் விட்டன.
30 ஆண்டு கால போரில் 40 ஆயிரம் போராளிகள் உயிர் நீத்துள்ளனர். 15 ஆயிரம் போராளிகளை அரசு கைது செய்துள்ளது. இவர்களை போர்க் கைதிகளாக நடத்தாமல் கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்து வருகிறது இலங்கை அரசு.
இந்த சூழ்நிலையில் தற்போது இலங்கைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை சர்வதேச நிதியம் அளிக்கவிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இலங்கைக்கு இவ்வளவு பெரிய கடன் தொகை கிடைப்பதை நியாயப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதற்குப் பரிசா இந்த கடன் உதவி என்றார் சிவாஜி லிங்கம்.












Click it and Unblock the Notifications