மும்பை தீவிரவாதத் தாக்குதல்-லக்வி, ஜாரா ஷா ஒப்புதல்?

இதுகுறித்து டான் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தி..
மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு லஷ்கர் அமைப்புதான் காரணம் என்பதற்குத் தேவையான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு கூறுகிறது. மும்பை சம்பவத்தை லஷ்கர் அமைப்புதான் திட்டமிட்டு செய்தது, அதற்குரிய பண உதவிகளையும் அது செய்து தந்தது என்பதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதுதொடர்பாக ஜூலை 11ம் தேதி இந்தியாவிடம் தரப்பட்ட விளக்க அறிக்கையில் இதுகுறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. கராச்சியில் உள்ள லஷ்கர அமைப்பின் முகாம்கள் மற்றும் தட்டா நகரில் கிடைத்த ஆதாரங்கள் இதை தெளிவுபடுத்துகின்றன.
சதித் திட்டம் தீட்டியது, தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்தது,ஆயுதங்களைக் கொடுத்தது ஆகியவை லஷ்கர்தான் என்பதும் நிரூபணமாகியுள்ளது.
இதையடுத்துதான் கடந்த வாரம் கைது நடவடிக்கைகளை பாகிஸ்தான் தொடங்கியது. லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் உள்ள தனி கோர்ட்டில் வைத்து விசாரணை தொடங்கியுள்ளது.
மும்பை சம்பவத்திற்குத் தாங்கள்தான் காரணம் என்று கைது செய்யப்பட்டவர்களில் இருவரான லக்வி மற்றும் ஜரார் ஷா ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் இதை பாகிஸ்தான் அதிகாரிகள் பகிரங்கப்படுத்தாமல் உள்ளனர்.
கைது செய்யப்பட்ட மற்ற மூவர் ஹமாத் அமீன் சாதிக், மஷார் இக்பால் என்கிற அல் குவாமா, ஷாஹித் ஜமீல் ரியாஸ் ஆகியோர் ஆவர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு மும்பை சம்பவத்துடன் தொடர்பு இருப்பது அறிவியல் பூர்வமாகவும், ஆவணங்கள் பூர்வமாகவும், வாய் மொழி ஒப்புதல் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளுடன் இணைந்து தாங்கள் திட்டமிட்டு செயல்பட்டதையும், சதித் திட்டம் தீட்டியதையும், நிறைவேற்றியதையும் லக்வி, ஜரார் ஷா, மஷார் இக்பால் ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளனராம்.
இவர்களில் ஜரார் ஷா, தகவல் தொடர்புப் பணியை கையாண்டுள்ளார். இக்பால், தீவிரவாதிகளை கையாண்டுள்ளார்.
கையால் எழுதப்பட்ட டைரி்க குறிப்புகள், பயிற்சித் திட்டம் குறித்த ஆவணங்கள், இந்திய வரைபடங்கள், லஷ்கர் முகாம்களிலிருந்து வந்த உத்தரவுகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஐவரும்,மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் முகாமக்ளை நடத்தியுள்ளனர். மேலும் கடல் மார்க்கமாக செல்ல உதவியுள்ளனர். கடலில் பயணம் செய்வதற்கான பயிற்சிகளையும் அளித்துள்ளனர். எப்படித் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர்.
அஜீஸாபாத் என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. கராச்சியில் உள்ள முகாமில்தான் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தட்டா என்ற இடத்தி்ல உள்ள ஐந்து ஓட்டு வீடுகளில் பயிற்சி வகுப்புகள் நடந்துள்ளன. இந்த இடம் கடலுக்கு மிக நெருக்கத்தில் உள்ளது. இங்கிருந்துதான் தீவிரவாதிகள் மும்பைக்குப் படகு மூலம் கிளம்பியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாக்கெட் டைரிகளில், யார் யாருக்குப் பயிற்சி தரப்பட்டது, செலவுக் கணக்கு உள்ளிட்டவை குறித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பாஹிம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் குறித்த விரிவான தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியாவிடம் கோரியுள்ளனர். இவர்களும் மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படுகிறது.
அன்சாரியும், அகமதுவும் தற்போது சிறைக்காவலில் உள்ளனர் என்று அந்த செய்தி கூறுகிறது.












Click it and Unblock the Notifications