வள்ளுவர் சிலை திறப்பு: இன்று வாழ்விலோர் திருநாள்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

இந்த விழா நாள் என்று வரும்? இன்றே வராதா? என்று எத்தனை நாள் காத்திருந்தோம் நாம்! அந்த நாள் தானே இந்த நாள்!

"கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்'' என்று இடைக்காடர் கூற, "அல்ல, அல்ல, அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்'' என்று அவ்வையார் திருத்தம் கூறியதாகப் புகழப்படும் பொய்யா மொழிக்கல்லவா இன்று விழா! புத்தொளி பாய்ச்சிய புலவனுக்கல்லவா விழா!

சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்! அந்த நம்பிக்கையுடன் தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன்.

உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக் கால வேதனையையும், இனிய வேதனையாகக் கொண்டு, பாலூட்டிச் சீராட்டிப் பழ முத்தம் சுளை சுளையாய்த் தந்து, பள்ளிக்கு அனுப்பி பின்னழகும், முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலி கட்டும் காட்சியினைக் காண முடியாமல் மணப் பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒரு விதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்!

என் தங்க உடன்பிறப்பே! அந்த தாயின் மகிழ்ச்சியைத்தான் பெறுகிறேன் இன்று! ஆம் - என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன், ஆனந்தப் பள்ளு பாடுகிறேன்'' என்று எழுதியிருந்தேன்.

அன்றையதினம் நான் அடைந்த அதே மகிழ்ச்சியைத்தான் இன்றும் அடைகின்றேன். அடுத்து, 31.12.1975 அன்று கூடிய திமுக அமைச்சரவைக் கூட்டத்தில் குமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு எதிரே உள்ள மற்றொரு பாறையில் 75 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த மாதமே திமுக அரசு கலைக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் 1989ம் ஆண்டு மீண்டும் திமுக அரசு ஏற்பட்டவுடன் 25.3.1989 அன்று நான் படித்த நிதி நிலை அறிக்கையில் குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைப்பது பற்றி மீண்டும் அறிவித்தேன். 6.9.1990 அன்று நானே நேரில் சென்று குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைப்புப் பணியைத் தொடங்கி வைத்தேன். 1991ல் திமுக அரசு மாறியது. வள்ளுவர் சிலை அமைப்பு பணியும் சுணங்கியது.

நான்காவது முறையாக முதல்வராக நான் பொறுப்பேற்றதற்கு பிறகு 25.6.1997 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் முடிவெடுக்கப்பட்டு, போதிய நிதி ஒதுக்கப்பட்டு- சுமார் ஒன்பது கோடி ரூபாய் செலவில் 133 அடி உயரமுள்ள வள்ளுவரின் சிலை நிர்மாணிக்கப்பட்டு 1.1.2000 அன்று திமுக ஆட்சியிலே திறந்து வைக்கப்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றாக அது கருதப்பட்டு, உலகத்திலிருந்து வருபவர்கள் எல்லாம் அதனை அன்றாடம் கண்டு களித்து வருகிறார்கள்.

'சுனாமி' பேரலைக்கே ஈடு கொடுத்து அந்த சிலை தமிழனின் பெருமையை இன்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. அந்த சிலையை அங்கே அமைத்திட எனக்கு பெரிதும் உதவியாக இருந்த சிற்பி கணபதி ஸ்தபதிக்கு நான் பலமுறை நன்றி தெரிவித்திருந்தாலுங் கூட, இந்த மடலிலும் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குமரி முனையில் நடைபெற்ற அந்த இரண்டு நாள் விழாவிலே நான் கலந்து கொண்டபோது- மறைந்த கோவை செழியன் அந்த விழாவில் பேசும்போது, பெங்களூரிலே பத்தாண்டு காலமாக திருவள்ளுவருடைய சிலை ஒன்று மூடிக் கிடக்கின்றதே, அது என்னவாயிற்று என்று கேட்டார். அடுத்துப் பேசிய வாழப்பாடி ராமமூர்த்தி, அதற்காக தான் கடிதம் எழுதியதாகவும், அதற்கு பதில் வரவில்லை என்றும் கூறினார். அதை ஏன் கவனிக்கக் கூடாது என்று என் பக்கத்திலே அமர்ந்திருந்த மக்கள் தலைவர் மூப்பனார் என்னைப் பார்த்துக் கேட்டார்.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தனோ, அதைப்பற்றி அந்த மேடையில் கோபாவேசமாகப் பேசினார். அதற்கெல்லாம் பிறகு நான் அந்த விழாவிலே முடிவுரை ஆற்றும்போது, "நான் ஒரு உறுதி எடுத்திருக்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்திலிருந்து ஒரு அமைச்சர் சென்னை மாநகரில் வந்து பேசியபோது, "தமிழக முதல்வர் கருணாநிதி விரைவிலே எங்கள் ஊருக்கு வரவேண்டும், ஒரு விழாவிலே கலந்து கொள்ளவேண்டும்'' என்று ஒரு கோரிக்கை வைத்தார். நான் அதற்கு பதிலளித்துப் பேசும்போது, "பெங்களூருக்கு ஒரு விழாவிற்காக நான் வருவதென்றால், நான் அங்கே வந்து இனி கலந்துகொள்கின்ற முதல் விழா, அந்த திருவள்ளுவருடைய சிலை திறப்பு விழாவாக இருந்தால்தான் வருவேனே தவிர, வேறு எந்த விழாவிற்காகவும் நான் அடியெடுத்து வைக்கமாட்டேன்'' என்று சொல்லிவிட்டேன் என்று கூறியிருந்தேன்.

பெங்களூர் தமிழ்ச் சங்கம், பெங்களூரில் ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு முன்பு அய்யன் திருவள்ளுவருக்கு சிலை நிர்மாணித்து -1.9.1991 அன்று அப்போது கர்நாடக மாநில முதல்-அமைச்சராக இருந்த பங்காரப்பா தலைமையில்- கர்நாடக மாநில அமைச்சராக இருந்த கே.ஜே.ஜார்ஜை கொண்டு திறந்திட ஏற்பாடுகளைச் செய்தது. ஆனால் 30.8.1991 அன்று பெங்களூர் நீதிமன்றம் விதித்த தடை காரணமாக அப்போது அங்கே திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. சிலை அமைப்பதற்கு பெங்களூர் மாநகர் மன்றம் வழங்கியிருந்த அனுமதியை 21.9.1991 அன்று திரும்பப் பெற்றுக் கொண்டது. அதன் பிறகு பலமுறை அந்த சிலையைத் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அது நடைபெறவே இல்லை.

இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலே தான் கர்நாடக அரசும், அதன் முதல்வர் எதியூரப்பாவும் பெரு முயற்சியெடுத்து அடுத்தடுத்துள்ள மாநிலங்கள் நல்லுறவுடன் இருக்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்தோடு இந்த சிலையினை இன்று நிறுவியிருக்கிறார்கள். மணவிழா அழைப்புகளில் எல்லாம் உறவினர்களும், நண்பர்களும் முன்கூட்டியே வந்திருந்து வாழ்த்த வேண்டுமென்று அச்சிடுவார்கள். அதற்கேற்ப நானும், இந்த விழாவிலே உள்ள மகிழ்ச்சி காரணமாக ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பெங்களூருக்கு வந்திருந்து திருவள்ளுவரின் சிலையினை திறந்து வைக்கவிருக்கிறேன்.

எனவே "இன்று வாழ்விலோர் திருநாள்'' என்று நான் தொடக்கத்தில் எழுதியது பொருத்தம் தானே? என்று அறிக்கையில் கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+