பன்றிக் காய்ச்சல் சந்தேகம்-11 பேருக்கு டாமிப்ளூ மாத்திரை!
சென்னை: சென்னை நகரில் தும்மல், சளி, வறட்சியான தொண்டை, காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ள 11 பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான டாமிப்ளூ மாத்திரைகள் வழங்கப்பட்டு சிகிச்சை தொடங்கியுள்ளது.
பன்றிக் காய்ச்சலுக்கு உள்ள ஒரே மருந்து டாமிப்ளூதான். ஆனால் இதனை சரமாரியாக பயன்படுத்தினால் பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதால் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் இருக்கும் 11 பேருக்கு டாமிப்ளூ மாத்திரைகளை கொடுத்து சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர்.
பன்றிக் காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால் அவர்களுக்கு டமி்ப்ளூவை கொடுக்குமாறு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் வரும் வரை காத்திருக்காமல், சந்தேகம் இருந்தால் உடனடியாக டாமிப்ளூவைக் கொடுக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனராம்.
ஆனால் இதனால் நோயாளிகளுக்கு கடும் பக்க விளைவுகள், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம் என சில டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேவையில்லாமல் டம்பிளூவை பயன்படுத்தினால் நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்து போய் விடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறுகையில், பன்றிக் காய்ச்சலினால் உயிரிழந்த பெரும்பாலானவர்கள் உரிய மருந்து உரிய நேரத்தில் கொடுக்கப்படாத காரணத்தால்தான் இறந்துள்ளனர். தொண்டைச் சளி சோதனை முடிவுகள் தெரிய வர நாள் ஆகும். அதுவரை காத்திருந்தால், உயிரிழ்ப்புகளைத் தவிர்க்க முடியாமல் போய் விடும் என்று விளக்கியுள்ளார்.
இதற்கிடையே, பரிசோதனை சாதனங்களை கூடுதலாக கொடுக்க வேண்டும் என அரசுக்கு கிங் இன்ஸ்டிடியூட் கோரிக்கை விடுத்துள்ளது. அப்போதுதான், பரிசோதனைகளை விரைவாக செய்து முடிவுகளை வேகமாக அறிவிக்கலாம் என்று அது கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications
