கேபி இங்கு கைதாகவில்லை-மலேசிய ஹோட்டல்
கோலாலம்பூர்: எங்களது ஹோட்டலில் வைத்து கேபி கைது செய்யப்படவில்லை என்று கோலாலம்பூரைச் சேர்ந்த ட்யூன் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், மலேசிய சிறப்பு போலீஸ் பிரிவினர் ட்யூன் ஹோட்டலில் கேபியைப் பிடித்து இலங்கை உளவுப் படையினரிடம் ஒப்படைத்ததாக கொழும்பைச் சேர்ந்த பாட்டம்லைன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூரில் உள்ள ட்யூன் ஹோட்டலுக்கு கேபி வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதை விடுதலைப் புலிகள் ஆதரவு இணையதளங்களும் உறுதி செய்து செய்தி வெளியிட்டன. ஆனால் கேபி எங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார் என்பதை இலங்கை அரசு இதுவரை உறுதியாகத் தெரிவிக்கவில்லை. பாங்காக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாகத்தான் இதுவரை கூறப்பட்டு வருகிறது.
தாய்லாந்து பிரதமர் இதை மறுத்துள்ளார். இதனால் கேபி எங்கு வைத்து, எப்படிக் கைது செய்யப்பட்டார், யார் அவரைக் கைது செய்தது அல்லது அவராக சரணடைந்தாரா என்பது குறித்து குழப்பமாக உள்ளது.
இந்த நிலையில், மலேசிய சிறப்புப் பிரிவு போலீஸார்தான் ட்யூன் ஹோட்டலுக்கு வந்த கேபியைப் பிடித்து இலங்கை உளவுப் படையினரிடம் கொடுத்ததாக பாட்டம்லைன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், ராஜபக்சேவின் தம்பி கோத்தபயா ராஜபக்சே மற்றும் மலேசியாவுக்கான இலங்கை தூதர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா ஆகியோர் மலேசிய அரசுக்கு கேபியைப் பிடித்துத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கேபியின் நடமாட்டத்தை மலேசிய சிறப்புப் பிரிவு போலீஸார் கண்காணித்து வந்தனர்.
ஆகஸ்ட் 5ம் தேதி ட்யூன் ஹோட்டலுக்கு கேபி வந்தது குறித்து தகவல் கிடைத்ததும் மலேசிய போலீஸார் அவரைப் பிடித்தனர். பின்னர் அவரை, தனி இடத்திற்குக் கொண்டு சென்ற மலேசிய போலீஸார், அவரிடம், மலேசிய இந்திய வம்சாவளியினர் நடத்தும் ஹின்ட்ராப் அமைப்புக்கும், புலிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர் அவரை இலங்கை உளவுப் படையினரிடம் ஒப்படைத்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதை ட்யூன் ஹோட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது. ட்யூன் ஹோட்டலில் வைத்து கேபி கைது செய்யப்படவில்லை என்று அவர்கள் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து ட்யூன் ஹோட்டலின் மார்க்கெட்டிங் மற்றும் செய்தித் தொடர்புப் பிரிவு மேலாளர் பிமேஷ் விராஜ்லால் டெய்லி மிர்ரர் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், கேபி கைது குறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் நாங்கள் விசாரித்தபோது, அப்படி யாரும் கைது செய்யப்படவில்லை. யாரையும், யாரும் பிடித்துச் செல்லவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும் குறிப்பிட்ட நேரத்தில் கேபி அங்கு தங்கியிருக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார் விராஜ்லால்.
இதனால் கேபி அவராகவே சரணடைந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications