இலங்கைத் தமிழர் துயரை துடைக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்- கருணாநிதி
சென்னை: இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து துயரத்தை அனுபவிக்கும் நிலை உள்ளது. இது அதிகரித்தபடி உள்ளது வேதனை தருகிறது. மனிதாபிமான அடிப்படையில் அரசியல் ரீதியாகவும், அரசு அளவிலும் இலங்கைக்கு இந்தியா நெருக்கடி கொடுத்து இலங்கைத் தமிழர்களின் துயரைத் துடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.
இதுதொடர்பாக பிரதமருக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் குடும்பங்களின் நிலைமையை மேம்படுத்துவதற்காக தமிழக அரசும், இந்திய அரசும் தொடர்ந்து உதவிகளை செய்து வருகின்றன.
போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், இலங்கையில் பல்வேறு இடங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறைந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள், போதிய மருத்துவ வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
சமீபத்தில் அங்கு பெய்துள்ள மழையால், அந்த முகாம்களில் தண்ணீர் புகுந்துள்ளதால், தமிழ் குடும்பங்களின் பிரச்சினைகளும், துயரமும் அதிகரித்துள்ளது.
இதற்காக, தமிழக அரசு, அரிசி, பருப்பு, சர்க்கரை, தேநீர், ஆடைகள், பாத்திரங்கள், செருப்பு உள்ளிட்ட ரூ.38.83 கோடி மதிப்புள்ள பல்வேறு பொருள்களை கப்பல்களில் நான்கு முறை அனுப்பி வைத்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான பொருள்களை தமிழக அரசு அனுப்பி வைத்தது.
இலங்கை தமிழர்களுக்காக, வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் கப்பலில் கொடுத்தனுப்பிய பொருள்கள் இலங்கை துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்காக இலங்கை அரசுக்கு, செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகை ஏதேனும் இருந்தால் அதனை செலுத்துவதற்கும் தமிழக அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆயினும், இந்த சரக்குகள் தொடர்பான பிரச்சினை, தீர்க்கப்பட்டுவிட்டதா, இல்லையா என்பது பற்றி தெளிவாக தகவல் ஏதும் தெரியவில்லை.
தமிழக அரசு கடந்த வாரத்தில், இலங்கை தமிழ் அகதிகளுக்காக அனுப்பி வைத்த நிவாரணப் பொருள்களை அங்குள்ள தமிழர்களுக்கு வினியோகிப்பதற்காக, இலங்கையில் உள்ள இந்திய துணைத் தூதர் அதனை பெற்றுக் கொண்டிருப்பது மகிழ்ச்சியை தருவதாக உள்ளது.
இலங்கையில் பரிதவித்து வரும் தமிழ் குடும்பங்களின் துயரங்களை போக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் உதவவேண்டும் என்று குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. எனவே, மனிதாபிமான அடிப்படையில், அரசு அளவிலும், அரசியல் ரீதியாகவும், இலங்கை அரசின் பல்வேறு மட்டங்களுக்கு இந்திய அரசு நெருக்கடி கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். இப்பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications