ராஜ்நாத் உத்தரவை மீறிய வசுந்தரா-பி.சி. கந்தூரியும் போர்க்கொடி

லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானில் பாஜக பெற்ற தோல்விக்குப் பொறுப்பேற்ற வசுந்தரா தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ராஜ்நாத் சிங் சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்து விட்டார் வசுந்தரா.
இந்த நிலையில் டெல்லி வந்த அவர் அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக நிபந்தனைகளை விதித்தார். ஆனால் கட்சித் தலைமை அதை ஏற்கவில்லை.
இதையடுத்து அவர் வசுந்தரா டெல்லியிலிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.
இந்த நிலையில் 3 நாட்களுக்குள் பதவியிலிருந்து விலகுமாறு வசுந்தராவுக்கு, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கட்சித் தரப்பில் கூறுகையில், ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் விலக வேண்டும். புதன்கிழமை கூடும் ராஜஸ்தான் சட்டசபை பாஜக உறுப்பினர்களின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கக் கூடாது என்று வசுந்தராவுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
ஆனால் இன்று ஜெய்ப்பூரில் நடந்த கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு வசுந்தரா ராஜே தலைமை தாங்கினார்.
இதனால் கட்சித் தலைமை அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளது. விரைவில் வசுந்தராவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
முன்னதாக தேசிய அளவில் தனக்கு முக்கியப் பதவி தர வேண்டும். தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். தனது ஆதரவாளருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தர வேண்டும் என நிபந்தனை போட்டிருந்தார் வசுந்தரா என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் முதலில் ராஜினாமா செய்யுங்கள், அதன் பிறகு கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கலாம் என்று ராஜ்நாத் சிங் கூறி விட்டாராம்.
ஆனால் அதை ஏற்க வசுந்தரா மறுத்து விட்டதாக கூற்பபடுகிறது. இதனால்தான் 3 நாள் கெடு அவருக்கு விதிக்கப்பட்டது.
பி.சி. கந்தூரியும் போர்க்கொடி:
வசுந்தரராஜா, அருண் ஷோரி ஆகியோரைத் தொடர்ந்து பாஜக தலைமைக்கு எதிராக மூத்த பாஜக தலைவரும், முன்னாள் உத்தரகாண்ட் முதல்வருமான பி.சி.கந்தூரியும் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
உத்தரகாண்ட் முதல்வர் பதவியிலிருந்து தன்னை விலகச் சொன்னது ஏன் என்று ராஜ்நாத் சிங்குக்கு அவர் கடிதம் எழுதி விளக்கம் கேட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் பாஜக தோல்வியைத் தழுவியது. அங்கு பாஜக ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் கந்தூரியை பதவி விலகுமாறு கட்சித் தலைமை உத்தரவிட்டது. இதையடுத்து கந்தூரி விலகினார். பொக்ரியால் புதிய முதல்வரானார்.
இந்த நிலையில் தன்னை பதவி விலகச் சொன்னது ஏன் என்று கேட்டு ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார் கந்தூரி. அதில், பாஜகவின் ஒட்டுமொத்த தோல்விக்கு என்னைப் பலிகடாவாக்கியது நியாயமற்றது.
உத்தரகாண்ட் மாநிலத்தி்ல் உள்ள பாஜகவின் 35 எம்.எல்.ஏக்களில் எனக்கு 27 பேர் ஆதரவாக உள்ளனர். அப்படி இருந்தும் என்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது ஏன் என்று கேட்டுள்ளாராம் கந்தூரி.
என்னை நீக்கிய முடிவை பாஜக தலைமை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கந்தூரி கோரியுள்ளாராம்.
அருண் ஷோரி சமீபத்தில் ராஜ்நாத் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், கந்தூரிக்கு ஆதரவாக பேசியிருந்தது நினைவிருக்கலாம்.
வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற்றிருந்தவர் கந்தூரி. இவர் ஒரு தீவிர வாஜ்பாய் ஆதரவாளர் என்பதும் முக்கியமானது. சமீப காலமாக பாஜக தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வரும் தலைவர்களும் வாஜ்பாய் ஆதரவாளர்கள் என்பதும் முக்கியமாக கவனிக்கத்தக்கது.
கந்தூரியின் கடிதம் குறித்து கருத்து தெரிவிக்க ராஜ்நாத் சிங் மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications