கிருஸ்துவ மதத்துக்கு மாறிய தலித் மாணவர்களுக்கும் உதவி தொகை
டெல்லி: உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும், கிருஸ்துவ மதத்துக்கு மாறிய தலித் மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சமூக நீதி தொடர்பான 2 நாள் மாநாடு டெல்லியில் நடக்கிறது. இதில் தமிழக ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் தமிழரசி, பேசுகையில்,
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான கல்வியில் ஆதி திராவிட மாணவர்கள் 69,000 பேருக்கு ரூ.7.24 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் நிதி உதவி தவிர, கிருஸ்துவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர் குடும்பங்களில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையை தமிழக அரசு வழங்குகிறது.
பிளஸ் டூ கல்வியிலும், கிருஸ்துவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. உயர் கல்விக்கு மத்திய அரசு இந்த உதவித் தொகையை வழங்காத போதிலும், தமிழக அரசு அளிக்கிறது.
ஆதி திராவிட மாணவர்களுக்கு விமான பணிப் பெண் பயிற்சி, விமானம் ஓட்டும் பயிற்சி, கடல்சார் பயிற்சி ஆகியவற்றை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
வேலை வாய்ப்பு அதிகம் உள்ள இத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
வீடு இல்லாத ஆதி திராவிட குடும்பங்களுக்கு நிலம் கையகப்படுத்தி, இலவச வீட்டுமனைப் பட்டா தருதல், வீடு கட்டித் தருதல் போன்றவற்றை மத்திய அரசே ஏற்று செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் தமிழரசி.












Click it and Unblock the Notifications