முதுகுளத்தூரில் பதட்டம்: பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை-போலீஸ் குவிப்பு
கமுதி: முதுகுளத்தூரில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே உள்ள முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள வீரம்பல் கிராமத்தினருக்கும், அருகில் இருக்கும் மற்றொரு கிராமத்தில் வசிக்கும் சமூகத்தினருக்கும் நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இதனால் இந்த இரு சமூகத்தை சேர்ந்தவர்களும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டி வந்தனர். இந்நிலையில் வீரம்பல்லை சேர்ந்த போஸ் என்பவரின் மகன் அறிவழகன் (25) அங்குள்ள பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, அறிவழகனை சராமரியாக வெட்டி சாய்த்தது. பின்னர் அங்கிருந்து தலைமறைவாகியது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அறிவழகன் மதுரை அரசு மருத்துவமனையி்ல சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து முதுகுளத்தூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் ஓடவில்லை. இந்த பிரச்சனையை அடுத்து முதுகுளத்தூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி, ஐஜி, டிஐஜி ஆகியோர் நிலைமையை நேரில் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, பரமக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications