21 தமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் கடத்திய இலங்கை கடற்படை

Subscribe to Oneindia Tamil

Rameswaram
ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையின் ரவுடித்தனத்திற்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. மீனவர்களை சுடுவதும், தாக்குவதும், கைது செய்வதுமாக தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். ஆனால் இதை மத்திய அரசு இதுவரை ஒரு முறை கூட உறுதியாக கண்டிக்கவோ, தடுக்கவோ முயலாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழக மீனவர்களை சீனர்களும் சேர்ந்து தாக்குவதாக பாஜக தலைவர் இல.கணேசனும் திடுக்கிடும் புகாரைக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் 21 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். ஆழ்கடலில் வலையை விரித்து மீன்களுக்காக காத்திருந்தனர்.

அந்த நேரத்தில் இலங்கை ராணுவத்தினர் சிறிய கப்பல்களில் அணி அணியாக வந்தனர். அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி தமிழக மீனவர்களை நோக்கி நெருங்கி வந்தனர். அவர்களை கண்டதும் மீனவர்கள் கடலில் விரித்த வலையை அவசர அவசரமாக எடுத்துக் கொண்டு கரைக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் மின்னல் வேகத்தில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் 20 படகுகளை சுற்றி வளைத்தனர். இதனால் அவர்கள் தப்பி வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் சிங்கள கடற்படையினர் மீனவர்களின் படகுகளுக்குள் புகுந்தனர். கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து எறிந்தனர். மேலும் டீசல் கேன்களையும், மீன்பிடி சாதனங்களையும் கடலில் தூக்கி வீசினார்கள். பல மீனவர்களை துப்பாக்கி கட்டையால் தாக்கினார்கள். பின்னர் அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை கொள்ளையடித்தனர். சில மீனவர்களை பிடித்துச் சென்றனர்.

அதோடு நின்று விடாமல் சிறிய கப்பலை ஒரு படகுமீது மோத விட்டனர். இதில் அந்த படகு உடைந்து சேதம் அடைந்தது. அந்த படகின் டிரைவர் குமரவேலை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து தங்கள் கப்பலில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

கப்பல் மோதியதால் சேதமடைந்த படகில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த படகில் இருந்த 4 பேர் தத்தளித்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக தண்ணீரை இறைத்தபடி கரைக்கு வந்தனர்.

அப்போது 5 படகுகள் மட்டும் கரை திரும்பாமல் இருந்தது தெரியவந்தது. அவற்றில் இருந்த 20 பேர் மட்டும் திரும்பி வராததால் அந்த மீனவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி மீன் துறை அலுவலத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் விசாரித்ததில் அந்த 5 படகுகளையும் அவற்றில் இருந்த 20 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்றது தெரிய வந்தது. தங்கள் கடல் எல்லைக்குள் வந்ததால் பிடித்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காணாமல் போன 21 மீனவர்களில், செல்வராஜ் என்பவர் படகை நேற்று முன்தினமே இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. அதில் இருந்த முனியசாமி, வால்டர், மணி, பாண்டி ஆகிய 4 பேரையும் மன்னார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவர்களை அக்டோபர் 1-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 17 மீனவர்களும் நேற்று மாலை வரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவில்லை.

இதைத் தொடர்ந்து ராமேசுவரத்தில் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம் அல்போன்ஸ் தலைமையில் நடந்தது.

தற்போது கடத்திச் செல்லப்பட்ட 21 மீனவர்களையும், 5 படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தியும், இலங்கை கடற்படையின் அடாவடித்தனத்தை கண்டித்து மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை கடற்படையின் கடத்தல் சம்பவம் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+