ஜெகன் ரெட்டிக்கு ஆந்திர முதல்வர் பதவி-ரோசய்யா 'ஓகே'
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் பதவியை மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வழங்குவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என இடைக்கால முதல்வர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
இம்மாத 2ம் தேதி நடந்த விமான விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணமடைந்தார். இதையடுத்து இடைக்கால முதல்வராக ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆந்திர காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பெரும்பாலோனார் ஜெகன் ரெட்டி தான் அடுத்த முதல்வராக வர வேண்டும் என அடம்பிடித்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் மேலிடமோ அவருக்கு வயது குறைவு என்பதால் சில காலம் கழித்து கொடுக்க ஆலோசித்து வருகிறது.
தற்போது அவருக்கு துணை முதல்வர், கேபினட் அமைச்சர் உள்ளிட்ட எதாவது ஒரு பதவியை கொடுத்து அவரை சமாதானப்படுத்த முயன்று வருகிறது.
இந்நிலையில் இடைக்கால முதல்வர் ரோசய்யா கூறுகையில்,
காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. டெல்லியில் கட்சிக்கு வலுவான தலைவர்கள் இருக்கின்றனர். காங்கிரஸ் எனக்கு அளித்து வரும் ஆதரவு திருப்தியளிக்கவில்லை என கூற முடியாது.
எனது தலைமையில் நடந்த வீடியோ கான்பிரன்ஸ் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்துக்கும் தவறாமல் வந்திருந்தனர்.
ஒரு தனி மனிதராக ஜெகன் ரெட்டியை இளமையான, உற்சாகம் தரக்கூடிய தலைவராக கருதுகிறேன். அவருக்கு அவருடைய தந்தையின் நல்ல குணங்கள் பல இருக்கின்றன.
அவரை முதல்வராக அறிவிப்பதோ அல்லது வேறு யாரையும் தேர்வு செய்வதோ காங்கிரஸ் கட்சியின் மேலிட விருப்பம். சிலர் நான் பரம்பரை அரசியலை ஆதரிக்கிறேனா என கேட்கிறார்கள்.
ஜெகன் விஷயத்தை நாம் அந்த கோணத்தில் பார்க்க முடியாது. பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறமை, கட்சி விஸ்வாசம், வேலைகளில் இருக்கும் ஈடுபாடு ஆகியவற்றை வைத்து முடிவு செய்ய வேண்டும்.
மேலும் சிலர், ஏன் இன்னும் எனது நிதி அமைச்சர் அறையிலே இருக்கிறீர்கள். முதல்வர் அறைக்கு போக வேண்டியது தானே என்கிறார்கள். எங்கு உட்கார்ந்தால் என்ன? நான் தினமும் முதல்வர் என்ற பெயருடன் அதிகாரிகளை சந்தித்து வருகிறேன்.
அங்கு நான் உட்காராமல் இருப்பதற்கு ராஜசேகர ரெட்டி இன்னும் அங்கே இருப்பது போன்ற உணர்வு எனக்குள் இருப்பதே காரணம் என்றார்.


Click it and Unblock the Notifications
