தமிழர்கள் முகாம்களில் பெரும் அவலம்-யுஎஸ்
நியூயார்க்: இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் உள்ள நிலைமை பெரும் கவலை அளிக்கிறது. அதிக அளவிலான பேர், மிகக் குறுகிய இடத்திற்குள் முடக்கப்பட்டுள்ளது வருத்தம் தருகிறது. விரைவில் அவர்களை சொந்த இடங்களுக்கு குடியமர்த்துவதில் இலங்கை அரசு அக்கறை காட்ட வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மிகக் குறுகிய இடத்திற்குள் கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கள் தங்கியிருப்பது பெரும் கவலை தருவதாக உள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இந்த இடத்தில் அவர்கள் முடக்கப்பட்டுள்ளனர். விரைவில் பருவ மழை பெய்யவுள்ளது. இதனால் எங்களது கவலை மேலும் அதிகரிக்கிறது. எனவே அங்குள்ள மக்கள் சொந்த இடங்களுக்கு குடி பெயருவதை அரசு விரைவுபடுத்தி அவல நிலையைப் போக்க வேண்டும் என்று கூறினார் பிளேக்.
விடுவிப்பதாய் போக்குக் காட்டி..
இதற்கிடையே, இலங்கையின் கொடும் வதை முகாம்களிலிருந்து விடுவிக்கப்படும் தமிழர்கள், அங்கிருந்து கிளம்பி அவர்கள் சொந்த ஊர்களுக்குச் சொல்லும் முன்பாகவே சிறைவைக்கப்படும் அவலம் ஆரம்பித்துள்ளது.
வவுனியா முகாம்களிலிருந்து செப்டம்பர் 15-ம் தேதி 2,000 தமிழ் அகதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு இப்போது வேறு எங்கோ மீண்டும் சிறை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
யாழ்ப்பாண முகாமிலிருந்து 568 தமிழ் அகதிகள் செப்டம்பர் 11-ம் தேதி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களும் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கைத்தடி என்ற இடத்தில் பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் மீண்டும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 1,706 அகதிகளும் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சேராமல் வழியில் எங்கோ தடுத்து காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இலங்கை அரசும் ராணுவமும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன என்று மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பு அலுவலகமே கூறுகிறது.
முகாம்களிலிருந்து நாங்கள் அனுப்பிவிட்டோம், மாவட்ட அதிகாரிகள்தான் தமிழர்களைத் தடுத்து நிறுத்திவைத்துள்ளனர் என்று முகாம் அதிகாரிகள் பழியை அவர்கள் மீது போடுகின்றனர்.
மகிந்தவின் இன்னொரு நாடகம்…
முகாம்களில் இருப்பவர்கள் விரும்பினால் வீடுகளில் வசிக்கும் தங்களுடைய உறவினர்களுடன் போய்ச் சேர்ந்து வாழலாம் என்று கூறப்பட்டது. அதற்காக மனுக்களும் தரப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி மனுச் செய்ய விரும்பியவர்களுக்கு மனுக்கள் கூட தரப்படவில்லை. மனுக்கள் கிடைத்து விண்ணப்பித்தவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதற்காக அவர்கள் அகதிகள் முகாம் அலுவலகங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் கூட ஈடுபட்டனர்.
உண்மை இப்படி இருக்க, ஐ.நா. அதிகாரி லின் பாஸ்கோவிடம் அதிபர் மகிந்த ராஜபட்ச பேசும்போது, உறவினர்களுடன் போங்கள் என்று கூறி விண்ணப்பங்களை முகாம் அலுவலகத்தில் வைத்திருந்தும் தமிழர்கள் அவற்றை வாங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர் என்று கூசாமல் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications