இடம் பெயர்ந்தோர் முகாம்களின் நிலை - ஆய்வு செய்கிறது ஐ.நா.
கொழும்பு: திறந்தவெளி சிறைச்சாலை என மனித உரிமை ஆர்வலர்களால் வர்ணிக்கப்படும் இலங்கை அரசின் இடம் பெயர்ந்தோர் முகாம்களின் நிலையை ஆய்வு செய்ய ஐ.நா. மனித உரிமை தூதர் வால்டர் காலின் இன்று இலங்கை வருகிறார்.
இடம் பெயர்ந்தோர் முகாம்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தமிழர்களை சொந்த ஊர்களுக்கு இடம் பெயர வைக்கும் முயற்சிகள் மிக மிக மந்தமாக நடப்பதாக சமீபத்தில் அங்கு சென்று திரும்பிய ஐ.நா. அரசியல் பிரிவு தலைவர் லின் பாஸ்கோ கூறியிருந்தார்.
இதையடுத்து இடம் பெயர்ந்தோர் முகாம்களின் நிலையை ஆய்வு செய்ய ஐ.நா. முடிவு செய்துள்ளது. இதற்காக ஐ.நா. மனித உரிமைப் பிரிவைச் சேர்ந்த இணைச் செயலாளர் வால்டர் காலின் இலங்கை விரைகிறார்.
இன்று கொழும்பு வரும் அவர் அதிகாரிகளை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் இடம் பெயர்ந்தோர் முகாம்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.
இதுகுறித்து இலங்கைக்கான ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் கூறுகையில், இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலையை முழுமையாக ஆய்வு செய்கிறார் வால்டர் காலின். அங்குள்ள நிலைமை குறித்து அவர் ஐ.நா.வுக்கு அறிக்கை சமர்பிப்பார் என்றார்.
கடந்த ஏப்ரல் மாதமும் காலின் இடம் பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications