இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்-இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை வாபஸ்

இந்தோனேஷிய நேரப்படி மாலை 5.16 மணியளவில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 7.6 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அந் நாட்டின் மேற்கு சுமத்ரா தீவின் படாங் நகருக்கு அருகே கரைக்கு 78 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. எரிவாயு குழாய் இணைப்புகள் சிதறியதில் ஆங்காங்கே தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. மக்கள் கடலோரப் பகுதிகளை விட்டு மலைப் பகுதியை நோக்கி ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 440 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கப்பூரிலும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலும் உணரப்பட்டது. அந் நாடுகளின் நேரப்படி மாலை 6 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் உயரமான கட்டடங்கள் கடுமையாக அதிர்ந்தன.
இதனால் இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியாவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, ஆகிய நாடுகளுக்கு பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. ஆனால், 1 அடி உயரமுள்ள சிறிய சுனாமி அலையே ஏற்பட்டதால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.
நேற்று நியூசிலாந்து அருகே உள்ள சமாவோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி அலைகள் ஏற்பட்டபோதும் இந்தோனேசியாவின் தலாடு தீவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது இது ரிக்டர் அளவு கோளி்ல் 5.5 புள்ளிகளாகப் பதிவானது.
2004ம் ஆண்டு இதே படாங் அருகே தான் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி அலைகள் இந்தியா உள்பட பல நாடுகளை தாக்கி 2.32 லட்சம் உயிர்களைப் பலி வாங்கியது குறிப்பிடத்தக்கது. அப்போது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 9.15 புள்ளிகளாகப் பதிவானது.
இன்றைய நிலநடுக்கம் 7.6 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளதால் சுனாமி ஏற்படவில்லை என்று ஜப்பான் நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications