தமிழர் முகாமில் துப்பாக்கிச் சூடு-விசாரணை நடத்தக் கோரும் ஐ.நா

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை உள்பட பலர் காயமடைந்தனர்.
இலங்கை அரசும், ராணுவமும் சேர்ந்து நடத்தி வரும் முகாம் விளையாட்டால், 3 லட்சம் அப்பாவித் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்தில் மூழ்கியுள்ளனர். அடிப்படை சுகாதாரம் உள்ளிட்ட எதுவுமே அங்கு சரிவர இல்லை என்று தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று முள்வேளிகலால் சூழப்பட்டுள்ள மாணிக் பார்ம் முகாமின் ஒரு மண்டலத்திலிருந்து இன்னொரு மண்டலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழர்கள் பெரும் கொந்தளிப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ராணுவம் அவர்களை துப்பாக்கியால் சுட்டது. இதில் ஒரு குழந்தை உள்பட பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தின் மூலம், முகாம்களில் உள்ள தமிழர்கள் விரக்தி மற்றும் கோபத்தின் உச்சத்திற்குப் போய்க் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. அகதிகளுக்கான ஏஜென்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு குழந்தைக்கு புல்லட் பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. அந்தக் குழந்தை தற்போது நடமாட முடியாத நிலையில் முடக்கப்பட்டுள்ளது.
அகதிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். துப்பாக்கிச் சூடு தொடர்பாக விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
முகாம்களில் உள்ள மக்களை விரைவாக இடம் பெயரச் செய்ய வேண்டும். அவர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா. மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரி வருவது சரியே என்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது.
விரைவில் மழைக்காலம் வரவுள்ளது. இந்த நிலையில் முகாம் நிலைமை மாறாவிட்டால் நோய்கள் பரவி பெரும் ஆபத்து ஏற்படக் கூடிய வாய்ப்பும் உள்ளன என்று கோரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications