தென்காசியில் செப்டம்பரில் 1300 வாகன வழக்குகள் பதிவு
தென்காசி: தென்காசி காவல் துறை சரகத்தில் கடந்த மாதம் ஆயிரத்து 300 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்தாசி டிஎஸ்பி சீனிவாசன் விடுத்துள்ள செய்தி குறிப்பு...
கடந்த மாதம் தென்காசி சரகத்திற்குட்பட்ட தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை, ஆய்க்குடி, அச்சன்புதூர் காவல் நிலையங்களில் மோட்டார் வாகனங்கள் தீவிர தணிக்கை செய்யப்பட்டது.
இதில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு விதி்முறைகளை மீறிய ஆயிரத்து 300 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் 419 வழக்குகள் தென்காசி, செங்கோட்டை நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு மொத்தம் 6 லட்சத்து 29 ஆயிரத்து 330 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ரூ. 5 லட்சம் எரிசாராயம் பறிமுதல்...
இதற்கிடையே, தமிழக-கேரள எல்லை திருநெல்வேலி மாவட்டம் புளியரை சோதனை சாவடிகளை கடந்து கேரள மாநிலம் பத்மனாபுரம் பரக்கோட்டிற்கு திருநெல்வேலியிலிருந்து கேஎல் 25 ஏ 1163 என்ற எண்ணுள்ள மினி லாரி மீன் ஏற்றிக் கொண்டு சென்றது.
இந்த லாரியை ஆரியங்காவு மதுவிலக்கு போலீசார் சோதனை செய்தனர். இச்சோதனையில் லாரியில் 20 லிட்டர் கொள்ளவு கொண்ட 93 கேன் எரிசாராயம் மீன் லாரியில் பதுக்கி வைத்து கொண்டு சென்றது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து டிரைவர் திருச்சூரை சேர்ந்த சிஜூ என்பவர் கைது செய்யப்பட்டார். பிடிபட்ட இவரையும், எரிசாராயத்தையும் போலீசார் நேற்று இரவு 12 மணிக்கு புனலூர் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.












Click it and Unblock the Notifications