பிளேடால் சிசுவின் கழுத்தை அறுத்து கொன்ற கொடூர தாய், பாட்டி கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பிறந்த சில நாட்களே ஆன இரண்டு பெண் குழந்தைகளின் கழுத்தை பிளேடால் அறுத்து கொன்ற தாய் மற்றும் பாட்டியை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. வயது 28. ஆட்டோ டிரைவரவான இவருக்கு ரேவதி என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
இந்நிலையில் 7 மாத கர்ப்பமாக இருநத ரேவதிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த 24ம் தேதி குறைபிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. பிறந்த 2 பெண் குழந்தைகளும் எடை குறைவாகவும், முழு வளர்ச்சியில்லாமலும் இருந்தது.
இதனால் அந்த குழந்தைகளை இன்குபெட்டரில் வைத்து சிகி்ச்சை அளித்து வருகின்றனர். தினமும் காலை, மதியம், இரவு நேரங்களில் மட்டும் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டும் என்பதால் ரேவதி அப்போது வந்து வார்டு நர்ஸ்களிடம் குழந்தையை வாங்கி செல்கிறார்.
அதே போல் இன்று காலை இரு குழந்தைகளையும், தாய் ரேவதி, மாமியார் தேனிலா ஆகியோர் வாங்கி சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து குழந்தைகளை கொண்டு வந்து கொடுத்தனர்.
அப்போது பணியில் இருந்த நர்ஸ்கள் குழந்தைகளை வாங்கி இன்குபெட்டரில் வைக்க சென்றனர். அப்போது ஒரு குழந்தையின் கழுத்து வெட்டப்பட்டு ரத்தம் வழிந்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த நர்ஸ்கள், இரு குழந்தைகளையும் பரிசோதித்தனர். அப்போது இரு குழந்தைகளும் இறந்திருந்தது தெரிய வந்தது.
உடனே குழந்தைகளின் தாய் மற்றும் பாட்டியை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் நாங்கள் எதுவும் செய்யவில்லை, நீங்கள்தான் குழந்தையை கொன்று விட்டீர்கள் என குற்றம் சாட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீஸார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசராணையில் தாய் ரேவதி, மாமியார் தேனிலாவும் சேர்ந்து ஒரு குழந்தையின் கழுத்தை பிளேடால் அறுத்தும், மற்றொரு குழந்தையின் கழுத்தை நெறித்தும் கொன்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Click it and Unblock the Notifications
