காஷ்மீரை தனி நாடாக சி்த்தரித்து சீனா சீண்டல்!
காத்மாண்டு: ஜம்மு காஷ்மீரிலிருந்து விசா கோரி விண்ணப்பிப்போருக்கு தனியான விசாவைத் தந்து இந்தியாவை சீண்டி வரும் சீனா, தற்போது காஷ்மீரை தனி நாடாக காட்டி மீண்டும் இந்தியாவை எரிச்சல்படுத்தியுள்ளது.
திபெத்துக்கு வரும் பத்திரிக்கையாளர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு சீன அரசின் சார்பில் ஒரு கையேடு தரப்படுகிறது. அதில் காஷ்மீரை தனி நாடாக அது சித்தரித்துள்ளது.
அந்த கையேட்டில், திபெத் குறித்த குறிப்புகள், தகவல்கள் உள்ளன. மேலும், திபெத்தின் எல்லைகளாக இந்தியா, நேபாளம், மியான்மர், காஷ்மீர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது காஷ்மீரை தனி நாடாக அது சுட்டிக் காட்டியுள்ளது. அதேபோல, சீனாவில் கிடைக்கும் வரைபடங்களிலும் கூட காஷ்மீர் இல்லாத இந்தியாதான் காணப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா, நேபாளத்திற்கு இடையிலான எல்லைப் பகுதியில், சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகவும், திபெத்தியர்கள், நேபாளத்திற்குள் நுழைந்து சீனாவுக்கு எதிராக போராடுவதாகவும் கூறி எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்புகள், கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுமாறு நேபாளத்தை மிரட்டவும் ஆரம்பித்துள்ளது சீனா.
மேலும், இந்திய - சீன உறவை வலுப்படுத்த வேண்டுமானால் தர்மசாலாவிலிருந்து தலாய் லாமாவை வெளியேற்ற வேண்டும் எனவும் அது கூறி வருகிறது.
தலாய் லாமா அடுத்த மாதம் அருணாச்சல் பிரதேச மாநிலத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதனால் கடும் எரிச்சலில் உள்ளது சீனா. இதையடுத்து நேபாளத்தின் வடக்கு மற்றும் திபெத் இடையிலான எல்லைப் பகுதியை மூடுமாறும், அங்கு பாதுகாப்புப் படையினரைக் குவிக்குமாறும் அது நேபாளத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
திபெத் - நேபாள எல்லைப் பகுதியில் உள்ள முஸ்தாங் என்ற பிரதேசம், ஆதி காலத்தில் திபெத்திய சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது. பின்னர் அது நேபாளத்துடன் இணைந்தது.
சீனா எல்லை மீறவில்லைய-தரூர்:
இந் நிலையில் இந்தியா- சீனா இடையிலான உரசல் எல்லை மீறவில்லை என்று வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசி தரூர் கூறினார்.
நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய தரூர், இருதரப்பிலும் வெளியிடப்பட்ட கருத்துகள் சிறிது வெப்பத்தை கிளப்பிவிட்டுள்ளது. இருப்பினும் இரு நாடுகளிடையிலான உறவு மிகவும் வலுவாகவும் உள்ளது.
இரு நாடுகளிடையே மோதல் உருவாக வலுவான காரணமில்லை. ஆசிய பிராந்தியத்தில் வலுவாக உள்ள இரு நாடுகளிடையே எல்லைப் பிரச்னை உலக அளவில் எரிச்சலூட்டும் விவகாரமாக ஆகிவிடக்கூடாது.
இரு நாடுகளிடையே வர்த்தகம் உள்ளிட்ட உறவுகள் வலுவாக உள்ளன. மேலும் உற்பத்திப் பொருள் தயாரிப்பில் சீனா முதலிடத்திலுள்ளது. இந்திய மாணவர்கள் 7,000 பேர் சீனாவில் பயில்கின்றனர். இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸில் பல சீனர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த உலகம் மிகவும் பெரியது, அதில் இந்தியா, சீனாவுக்கு இடமுண்டு. இந்திய நிறுவனங்கள் பல ஷாங்காயில் கிளைகளைத் தொடங்கியுள்ளன.
அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதிதான். அங்கு செல்வதற்கு இந்திய குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. இதுகுறித்து வேறெந்த நாடும் கருத்து கூறக் கூடாது என்றார் தரூர்.












Click it and Unblock the Notifications