திமுக சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சி திமுகதலைவர் சிவப்பிரகாசம் மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது.
சுயேச்சை- அதிமுக- திமுக..
குடியாத்தம் நகராட்சி தலைவராக இருப்பவர் ஆர்.எஸ்.சிவப்பிரகாசம். இவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் நகராட்சித் தலைவர் ஆனார். அதன் பின்னர் அதிமுகவுக்குப் போனார். அதே வேகத்தில் பின்னர் திமுகவுக்கு வந்து விட்டார்.
நகராட்சி தலைவர் ஆர்.எஸ்.சிவப்பிரகாசம் பல மாதங்களாக நகராட்சியின் சாதாரண கூட்டங்களை கூட்டாததால் குடியாத்தம் நகரின் வளர்ச்சிப் பணிகள் பாதிப்படைகின்றன. இதனால் இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது என்று கவுன்சிலர்கள் முடிவு செய்தனர்.
இது குறித்து கடந்த மாதம் நகராட்சி துணைத் தலைவர் எஸ். சவுந்தர்ராஜன் தலைமையில் வேலூர் மாவட்ட கலக்டரிடம் மனு கவுன்சிலர்கள் கொடுத்தனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு நகராட்சிகளின் ஆணையர் உத்தரவின்பேரில் நகராட்சி தலைவர் ஆர்.எஸ்.சிவப்பிரகாசம் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நகராட்சிகளின் மண்டல இயக்குனர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.
அத்தனை பேரும் எதிர்ப்பு...
இதில், நகராட்சி தலைவர் ஆர்.எஸ்.சிவப்பிரகாசம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக 18, திமுக. 4, முஸ்லீம் லீக் 2, மதிமுக 2, பா.ம.க. 1, காங்கிரஸ் 1, சுயேட்சை 1 என மொத்தம் 29 உறுப்பினர்கள் ஆதரித்தனர்.
நகராட்சி தலைவர் ஆர்.எஸ்.சிவப்பிரகாசம், கவுன்சிலர் டிஷ் மோகன் (சுயே.) ஆகிய 2 பேர் மட்டுமே தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
காங்கிரஸ் உறுப்பினர் ஷர்மிளா கங்காதரன், சுயேட்சை உறுப்பினர்கள் ஜெய்குமார், மாரியப்பன், மணிமேகலை ஆகிய 4 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன. இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறியது. இந்த வாக்கெடுப்பு விவரத்தை அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைப்பேன். இதுபற்றி அரசு முடிவு அறிவிக்கும் என்று நகராட்சிகளின் மண்டல இயக்குனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications