100 ஆண்டுக்கு பின் வேதாரண்யம் கோயிலில் தலித்துகள்
வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், செட்டிப்புலம் சிவன் கோயிலுக்குள் கலெக்டர் தலைமையில் அழைத்துச் செல்லப்பட்ட தலித்துகள் வழிபாடு நடத்தினர்.
வேதாரண்யம் அருகே உள்ள காமாட்சியம்மன்- ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தலித் மக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர்களுக்கான உரிமையை உறுதி செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த மாதம் 30ம் தேதி மறியல் போராட்டம் நடந்தது.
சிபிஎம் போராட்டத்தையடுத்து அந்த கோவிலுக்கு வருவாய்த் துறை சீல் வைத்தது. ஆனால், அந்த சீலை மறுநாளே மற்றொரு தரப்பினர் உடைத்தனர்.
இதையடுத்து பிரச்சனைக்குத் தீர்வு காண சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. அதி்ல் எடுக்கப்பட்ட முடிவின்படி கடந்த 14ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த இன்னொரு சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து, வன்முறையில் ஈடுபட்டதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
315 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் சமாதானக் கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, நேற்று காலை தலித் மக்களுடன் கலெக்டர் முனியநாதன் கோயிலுக்குள் சென்றார்.
செட்டிப்புலம் கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்களில் 52 பெண்கள் உள்பட 75 பேர் கோயிலுக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர்.
காலை 10.40 மணிக்கு கலெக்டர் முனியநாதன் தலைமையில் அந்த மக்கள் கோயிலுக்குள் சென்றனர்.
அவர்களை மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆலய நிர்வாகி எம். ரத்தினசாமி, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் எஸ். சிவப்பிரகாசம், ஊராட்சித் தலைவர் மணிமாறன் கோயில் நாட்டாண்மைகள் நாகப்பன், ராஜேந்திரன், வேதரத்தினம், சுப்பிரமணியன், கலைமணி உள்பட 20 பேர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
இதையொட்டி, தஞ்சை சரக டி.ஐ.ஜி. அபய்குமார் சிங் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
100 ஆண்டுகளாக தடை போடப்பட்ட இந்த மக்கள் இப்போது தான் முதன்முதலாக இந்தக் கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications