எதியூரப்பா-ஷோபா Vs ரெட்டி பிரதர்ஸ், சபாநாயகர், ரேணுகாச்சாரியா: முழி பிதுங்கும் பாஜக தலைமை!

கோஷ்டி 1:
எதியூரப்பாவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ரெட்டி சகோதரர்கள் என்றழைக்கப்படும் பெல்லாரியைச் சேர்ந்த கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி மற்றும் ஸ்ரீராமுலு ஆகியோர் தலைமையில் அமைச்சர்களும் அவர்களது ஆதரவு எம்எல்ஏக்களும் ஒரு கோஷ்டியாகவும்,
கோஷ்டி 2:
எம்எல்ஏ ரேணுகாச்சாரியா தலைமையில் 6 எம்எல்ஏக்கள் இன்னொரு கோஷ்டியாகவும் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
கோஷ்டி 1+2:
இவர்கள் கடந்த 4 நாட்களாக ஐந்து நடத்திர ஹோட்டல்களில் தனித்தனியே தங்களது ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அவ்ப்போது இரு கோஷ்டிகளும் ஒன்றை ஒன்று சந்தித்தும் பேச்சு நடத்தி வருகின்றன.
முதல்வர் படமே இல்லாமல் அமைச்சர் விழா:
முதல்வரை ஒதுக்கும் வகையில் பெல்லாரியில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீடு கட்டும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் ஜனார்தன ரெட்டி. பாஜக சார்பில் நடந்த இந்த விழாவுக்கு எதியூரப்பாவை அழைக்கவில்லை. மேலும் விழா நடந்த பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் முதல்வர் படமோ, பாஜகவின் வேறு தலைவர்கள் படங்களோ இல்லை.
இக் கூட்டத்தில் பேசிய ஜனார்தன ரெட்டி, பதவிக்காக நாங்கள் அலையவில்லை. தேவைப்பட்டால் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என்றார்.
சுரங்கத்துக்கு எதியூரப்பா அனுப்பிய நோட்டீஸ்:
இந் நிலையில் எதியூரப்பா தனது ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்துக்குப் பின் ரெட்டி சகோதரர்கள் நடத்தும் சுரங்கத்துக்கு மாவட்ட வன அதிகாரியிடம் இருந்து ஒரு நோட்டீஸ் பறந்தது.
அதி்ல், உங்களது பெல்லாரி ஓபலாபுரம் சுரங்கத்துக்காக அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளீர்கள். வனப் பகுதியில் சாலை போட்டுள்ளீர்கள். இதனால் உங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பறந்து வந்த அருண் ஜேட்லி:
இவ்வாறு மாநில பாஜக முதல்வர், ரெட்டிகள், ரேணுகாச்சாரியா ஆகியோர் தலைமையில் 3 கோஷ்டிகளாகப் பிரிந்து மோதி வரும் நிலையில் ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதையடுத்து பாஜக மேலிடம் நிலைமையை சமாளிக்க அருண் ஜேட்லியை அவசரமாக பெங்களூருக்கு அனுப்பியுள்ளது.
அவர் முதல்வர் எதியூரப்பா, ரெட்டி சகோதரக்கள் ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசினார். ரேணுகாச்சாரியா கோஷ்டியை அவர் சந்திக்கவில்லை. இதனால் இனி அவரே கூப்பிட்டாலும் கூட அவரை சந்திக்க மாட்டோம் என்று ரேணுகாச்சாரியா தரப்பு எம்எல்ஏக்கள் தெரிவித்துவிட்டனர்.
ஒரு பிரச்சனையும் இல்லையே.. ஜேட்லி:
ரெட்டி சகோதரரர்களை ஜேட்லி சந்தித்தபோது, மாநில பாஜக தலைவர் சதானந்த கெளடாவும் கலந்து கொண்டார். இவர் ரெட்டி, எதியூரப்பா, ரேணுகாச்சாரியா ஆகிய மூவருக்குமே ஆகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்புகளுக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஜேட்லி,
கர்நாடக பாஜக ஆட்சியில் எந்தவித குழப்பமும் இல்லை, கட்சித் தலைவர்களிடையே சிறிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அது பேசித் தீர்க்கப்படும். பாஜக அரசும், அமைச்சரவையும் ஒற்றுமையாக செயல்படுகிறது. எந்தவித பிளவுமில்லை என்றார்.
ஜேட்லி எதுக்கு வந்தார்?-எதியூரப்பா:
உடனிருந்த எதியூரப்பா கூறுகையில், கர்நாடகத்தில் இரு அமைச்சரவை இல்லை. எனது தலைமையில் ஒரே அமைச்சரவைதான் உள்ளது. சில கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்க்க அருண் ஜேட்லி வந்துள்ளார். அவர் அவர் வேலையை செய்வார். நான் எப்போதும்போல என் வேலையை செய்வேன்.
உண்மையைச் சொன்னால் அருண் ஜேட்லி வந்திருக்கவே தேவையில்லை. நான் டெல்லி பாஜக மேலிடத்திடம் இப்போது தொடர்பு கொள்ள வேண்டியத் தேவையும் இல்லை என்றார் கடுப்புடன்.
முதல்வர் பதவி கோதாவில் சபாநாயகர்:
இந் நிலையில் முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராகக் கிளம்பியுள்ள ரெட்டி சகோதரர்களுக்கு சட்டமன்ற சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டாரின் முழு ஆதரவு உள்ளது.
இதையடுத்து எதியூரப்பாவுக்குப் பதிலாக ஷெட்டாரை முத்லவராக்கலாம் என்று ரெட்டி சகோதர்கள் ஜேட்லியிடம் கூறி வருகின்றனர்.
மடாதிபதிகளை வளைக்க..:
ரெட்டி-எதியூரப்பா சண்டையில் தனக்கு முதல்வர் வாய்ப்பு கனிந்து வருவதை உணர்ந்துள்ள ஷெட்டார், அந்த வாய்ப்பை அதிகரிக்க கர்நாடகத்தின் பல்வேறு சமூகததைச் சேர்ந்த மடாதிபதிகள் (கர்நாடக அரசியலில் மடாதிபதிகளுக்கு பங்கு மிக மிக அதிகம்), ஆர்எஸ்எஸ் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார்.
இன்று எம்எல்ஏக்களுக்கு விருந்து:
மேலும் தனக்கு எத்தனை எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கும் என்பதை நூல்விட்டுப் பார்க்க, இன்று பாஜக எம்எல்ஏக்களுக்கு விருந்தும் வைத்துள்ளார் ஷெட்டார். இதில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் பங்கேற்றால் எதியூரப்பாவின் பதவிக்கு ஆபத்து நிச்சயம்.
ஷெட்டாருக்கு எதியூரப்பா சாமாதானக் கொடி:
இந் நிலையில் ஷெட்டாரை சந்தித்த எதியூரப்பா ஆதரவு எம்எல்ஏக்கள், உங்களுக்கும் முதல்வருக்கும் இடையிலான பிரச்சனையை பேசித் தீர்க்கலாம். ரெட்டிகளுடன் சேர்ந்து கொண்டு எதியூரப்பாவுக்கு எதிராக செயல்பட வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பாஜக டெல்லி தலைமை கேட்டும் கூட ஷெட்டாருக்கு அமைச்சர் பதவி தர எதியூரப்பா தொடர்ந்து மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் அமைச்சரானால் தனக்கு ஆபத்து என்பதால் அவரை எதியூரப்பா தான் சபாநாயகராக்கினார். இதன்மூலம் அவரது அரசியல் எதிர்காலத்துக்கு ஆப்பு வைக்க எதியூரப்பா முயன்றார்.
ஆனால், இப்போது பதிலடிக்குத் தயாராகிவிட்டார் ஷெட்டார்.
ஷோபா தான் காரணம்:
இந் நிலையில் கட்சியில் ஏற்பட்டுள்ள இத்தனை சிக்கலுக்கும் அமைச்சர் ஷோபா தான் காரணம் என்று ரெட்டி, ரேணுகாச்சாரியா தரப்பு ஜேட்லியிடம் புகார் கூறியுள்ளது.
ஷோபாவுக்கு முதல்வர் எதியூரப்பா மிக அதிக முக்கியத்துவம் தருகிறார். ஷோபா எங்களை மதிப்பதே இல்லை. இப்போது அவரை மாநில பாஜக தலைவராக்கவும் முயல்கிறார். அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து ஷோபாவை பதவி நீக்குமாறு எதியூரப்பாவிடம் ஜேட்லி கோருவார் என்று தெரிகிறது. ஆனால், அதை எதியூரப்பா கேட்பாரா என்று தெரியவில்லை.
ரெட்டி பிரதர்சின் பேராசை:
பிரச்சனைக்கு முக்கியக் காரணம் ரெட்டி சகோதரர்களின் பேராசை தான். மூன்று முக்கிய அமைச்சர் பதவிகள், அவர்களது ஆதரவாளர்களுக்குப் பதவிகள் என எதியூரப்பா அள்ளித் தந்திருந்தாலும் துணை முதல்வர் பதவி வேண்டும், உள்துறை அமைச்சர் பதவி வேண்டும், எங்கள் ஆதரவாளர்களுக்கு மேலும் அதிக பதவி வேண்டும் என இந்த கோஷ்டி எதியூரப்பாவை டார்ச்சர் செய்து வருகிறது.
ரெட்டிகளுக்கு சுஷ்மாவின் ஆசிர்வாதம்:
இவர்களுக்கு சுஷ்மா சுவராஜின் ஆசிர்வாதம் இருப்பதால் டெல்லி தலைமையிடம் எதியூரப்பா முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து இவர்களை தனது வழியிலேயே கையாள ஆரம்பித்தார்.
ஷோபா உள்ளிட்ட ஜூனியர் அமைச்சர்களை வைத்து ரெட்டி சகோதரர்களுக்கு அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் எரிச்சல தந்து வந்தார்.
ரெட்டி சகோதரர்களின் சொந்த மாவட்டமான பெல்லாரியில் அவர்களுக்கு வேண்டாத அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளை நியமித்து தனது வேலையைக் காட்டினார் எதியூரப்பா.
மேலும் இவர்கள் பொறுப்பில் உள்ள மாவட்டங்களில் ஷோபா மூலம் திட்டங்களை நிறைவேற்றினார். இந்த விழாக்களுக்கு ரெட்டிகளை அழைக்காமல் ஷோபவே தலைமை தாங்கினார்.
இவ்வாறு ஆரம்பித்த மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications