ரயில் கடத்தல்: எப்ஐஆரில் மாவோயிஸ்ட் இல்லை!
கொல்கத்தா: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் கடத்தல் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், மாவோயிஸ்டுகள் பெயரோ அல்லது அவர்கள் சார்ந்த காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியின் பெயரோ இடம் பெறவில்லை.
ஜார்காம் ரயில்வே போலீஸார் நேற்று இந்த எப்.ஐ.ஆரை பதிவு செய்தனர். அதில், அடையாளம் தெரியாத நபர்கள் ரயிலை கடத்திச் சென்றதாகவும், பயணிகளை அச்சுறுத்தியதாகவும், ரயில்வே ஊழியர்களை நீ்ண்ட நேரம் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று காலைதான் மார்க்சிஸ்ட் தலைவர்கள் பிரகாஷ் காரத், சீதாராம் எச்சூரி ஆகியோர், மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுடன் மமதா பானர்ஜி கரம் கோர்த்து செயல்படுவதாகவும், மமதா கட்சியினரின் தூண்டுதலின்பேரில்தான் ரயில் கடத்தல் நடந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில், மமதா கையில் உள்ள ரயில்வே போலீஸார் தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் மாவோயிஸ்டுகள் பெயர் விடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாவோயிஸ்டுகள்தான் ரயிலைக் கடத்தினர் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் ஏன் அவர்களது பெயரை ரயில்வே போலீஸார் எப்.ஐ.ஆரில் சேர்க்கவில்லை என்ற சர்ச்சை வெடித்துள்ளது.
மாவோயிஸ்டுகளின் ஆதரவு இருந்தால் தான் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் தேர்தல்களில் வெல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதுவரை இடதுசாரிகளுக்கு ஆதரவாகவே இருந்து வந்த அவர்களை தன் பக்கம் ஈர்க்க மம்தா முயன்று வருவதாகக் கூறப்படும் நிலையில் இப்படிப்பட்ட எப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மம்தாவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸும் இதை கண்டு கொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications