கருவின் பாலின சோதனை-2 டாக்டர்களுக்கு சிறை
மும்பை: சட்டத்திற்குப் புறம்பாக, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய சோதனை நடத்திய இரண்டு டாக்டர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்பதை அறிய அரசு தடை விதித்துள்ளது. இவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது.
பெண் சிசுக் கொலையை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், மும்பை தாதர் நகரில் ஸ்ரீ மெட்டர்னிட்டி நர்சிங் ஹோம் வைத்துள்ள டாக்டர் சுபாங்கி அத்கர் (62), ஹோமியோபதி டாக்டரான சாயா தாதேத் (42) ஆகியோர், கருகவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியும் சோதனை நடத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள்.
இவர்கள் மீது பிரசவத்திற்கு முன்பே பாலினச் சோதனை செய்யத் தடை விதிக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இச்சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் இவர்கள் தடையை மீறியதாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜாம்ப்கர், இச்சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையான 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 10,000 அபராதம் (இதுதான் அதிகபட்ச அபராதம்) ஆகியவற்றை விதித்து அதிரடித் தீர்ப்பளித்தார்.
இந்த இரு டாக்டர்களும் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் நாளிதழ்களில் ஒரு விளம்பரம் அளித்தனர். அதில், ஆண் குழந்தை வேண்டுவோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்திருந்தனர். இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுதலையாகியிருந்தனர்.


Click it and Unblock the Notifications
