பன்றிக் காய்ச்சல்- அதிமுக பிரமுகர் பலி
கோவை: கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு அதிமுக பிரமுகர் பலியாகியுள்ளார். இவரையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை 485 பேரும், தமிழகத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஆலம்கொம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். 60 வயதாகும் இவர், வீராசாமி நகர் கிளை அதிமுக செயலாளராக இருந்து வந்தார்.
இவருக்கு 2 நாட்களுக்கு முன்பு கடும் காய்ச்சல் அடித்தது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையில் பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அதே மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் உயிரிழந்தார்.
இவரையும் சேர்த்து இதுவரை தமிழகத்தில் 8 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 485 பேர் பலி...
இந்தியாவில் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று கேரளா, பஞ்சாபில் தலா ஒருவர் உயிரிழந்தனர். மேலும், ஏற்கனவே இறந்த ஒருவருக்கும் பன்றிக் காய்ச்சல் தாக்கியது நேற்று உறுதி செய்யப்பட்டது.
பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை இந்தியாவிலேயே அதிக அளவாக மகாராஷ்டிர மாநிலத்தில் 206 பேர் இறந்துள்ளனர். கர்நாடகாவில் 117 பேரும், கேரளாவில் 21 பேரும், குஜராத்தில் 40 பேரும் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் 8, ஹரியானாவில் 5, கோவாவில் 4, உத்தரகாண்ட், உ.பியில் தலா 3, பஞ்சாப், ராஜஸ்தானில் தலா 2, ஆந்திராவில் 49, டெல்லியில் 16, புதுச்சேரியில் 6, இமாச்சல் பிரதேசம், சட்டீஸ்கர், மிஜோரமில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications