நீலகிரியில் வெள்ளச் சேதம் ரூ. 300 கோடி-ராசா
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் 300 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறினார்.
நீலகிரியில், கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டியது . இதில் 72 பேர் உயிரிழந்தனர்.
இந் நிலையில் நீலகிரி எம்பியான ராசா நிருபர்களிடம் பேசுகையில்,
நிலச்சரிவுகள் சரி செய்யப்பட்டுவிட்டதால் கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு இன்று முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கும். ஆனால், 8 டன்னுக்கு அதிக எடையுள்ள வாகனங்கள் சாலைகளில் அனுமதிக்கப்படாது.
நிலைமையை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முழுமையான சீரமைப்புக்கு ஒருமாத காலமாகும்.
மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 816 வீடுகள் சேதமடைந்துள்ளன. 360 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 1,100 பேர், 10 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும்.
மின்சார வினியோகம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை லாரிகளில் குந்தா, கெத்தை பகுதிகள் வழியாக கொண்டு வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேட்டுபாளையம்- கோத்தகிரி- ஊட்டி சாலையில் கொட்டக்கம்பை பகுதியில் சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளது. நாளை மாலைக்குள் இந்த பிளவு சீரமைக்கப்படும். மேலும், மடித்தொரை பகுதியில் ஏற்பட்டுள்ள பிளவு, நான்கு நாட்களுக்குள் சீரமைக்கப்படும்.
பர்லியாறு சாலை போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டு, இன்னும் 3 தினங்களில் பொதுமக்கள் சேவைக்கு திறந்து விடப்படும்.
திங்கள்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வரலாம். முழுமையாக சேதமடைந்த வீடுகளும் போர்க்கால அடிப்படையில் மீண்டும் கட்டித்தரப்படும்.
வருங்காலங்களில் நிலச் சரிவு ஏற்படும் பகுதிகளிலும், சரிவான பகுதிகளிலும் வீடுகள் கட்ட அனுமதி அளிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கனமழையால் 600 எக்டேர் நிலப்பரப்பில் தோட்டப் பயிர்கள் மற்றும் சாகுபடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கடும் சேதம் அடைந்துள்ளன. இதர சேதங்கள் குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
ராசாவை வழிமறித்த மக்கள்:
முன்னதாக அமைச்சர் ராஜா சென்ற கார் ஊட்டி கொடப்பாமந்து பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அப்பகுதி மக்கள் காரை வழிமறித்தனர்.
தங்கள் பகுதிகளில் பல இடங்களில் வீடுகள் இடிந்திருப்பதாகவும், அதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் என ராசா உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
மண்ணில் புதைந்த 50 வீடுகள்:
இந் நிலையில் கடந்த 4 நாட்களாக குன்னூர் பொதுமக்கள் குடிதண்ணீர், மின்சாரம் இல்லாமல் மிகுந்த அவதிப்படு வருகின்றனர்.
காட்டேரி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் 2 லாரிகள் மண்ணில் புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நடுகட்டி பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. அங்கும் மீட்பு பணி விரைவாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications