நீலகிரியில் மீண்டும் பலத்த மழை- பள்ளிகளுக்கு மேலும் 2 நாள் விடுமுறை
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் கன மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் 3 நாட்கள் பெய்த பலத்த மழையினால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. முக்கிய சாலைகளான ஊட்டி- குன்னூர் ரோடு, குன்னூர்- மேட்டுப்பாளையம் ரோடு, குன்னூர்- கோத்தகிரி ரோடு, ஊட்டி- கோத்தகிரி ரோடு ஆகிய சாலைகளில் மரங்கள், மண் சரிந்து விழுந்தன.
இங்கு சாலைகளில் பல இடங்களில் பிளவுகள் ஏற்பட்டு நீலகிரி நிலைகுலைந்தது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
கன மழை, வெள்ளம் , நிலச்சரிவுக்கு 43 பேர் இறந்தார்கள். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். இயல்பு வாழ்க்கை அங்கு பெரும் பாதிப்பைச் சந்தித்தது.
அங்கு மத்திய அமைச்சர் ராசா, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர், காவல்துறை அதிகாரிகள் முகாமிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டனர். இதன் விளைவாக போக்குவரத்து சற்று சீரடைந்தது. கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு நேற்று பஸ்கள் இயக்கப்பட்டன.
மீண்டும் தொடரும் பலத்த மழை...
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழை அதிகாலை 5 மணி வரை நீடித்தது.
மழையினால் ஊட்டி- மஞ்சூர் சாலையில் ஏற்கனவே அகற்றப்பட்டு இருந்த மண், சரிந்தது. மஞ்சூர் ரோட்டில் லவ்டேல் அருகே மண்சரிந்ததால் சாலை சேறும்-சகதியுமாக மாறியது.
இதேபோல் ஊட்டியில் இருந்து அச்சனக்கல் செல்லும் சாலையில் மண் சரிந்தது. இதனால் ஏற்பட்ட சேற்றில் ஒரு லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று பகலில் பொக்லைன் எந்திரம் கொண்டு சாலையில் கிடந்த சேறும், சகதியும் அகற்றப்பட்டன. மேலும் சேற்றில் சிக்கிய லாரியும் மீட்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று மாலை மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் நீலகிரி மாவட்ட மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எங்கே மீண்டும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு விடுமோ என்று அவர்கள் பீதியில் இருக்கிறார்கள்.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...
மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் 2 நாட்களுக்கு விடுமுற நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி - குன்னூர் சாலையில் மண் சரிவு...
இந்த நிலையில் ஊட்டி, குன்னூர் சாலையில் நேற்று பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த சேத விவரம் வெளியிடப்படவில்லை. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கண்டோன்மென்ட் ஊழியர்கள் ஸ்டிரைக்...
இதற்கிடையே, மீட்புப்ப் பணிகள் சரிவர நடக்காததைக் கண்டித்து வெல்லிங்டன் கண்டோன்மென்ட் வாரிய ஊழியர்கள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.
வாரியப் பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சரிவர நடக்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டத்தில் அவர்கள் குதித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாளைமுதல் போராட்டத்தில் குதிக்கவிருப்பதாக பொதுமக்களும் அறிவித்துள்ளதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications