குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் மட்டுமே காணவில்லை- அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் மட்டுமே காணவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

குமரி மாவட்ட மீன்பிடி கிராமங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மீனவர்களைக் காணவில்லை என்று தகவல் வெளியானது. ஆனால் வெறும் 8 மீனவர்கள் மட்டுமே காணவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் மீன்வளத்துறை செயலாளர் சம்பு கலோலிக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களில் இருந்து கேரளா, கர்நாடகா, கோவா, மகராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு ஆழ் கடல் மீன்பிடி தொழிலுக்கு விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது பியான்' புயலில் சிக்கி சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என சில நாளேடுகளிலும் ஊடகங்களிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இச்செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து குளச்சல், தூத்தூர், மார்த்தாண்டம் துறை போன்ற பகுதிகளில் உள்ள மீனவ கிராமங்களில் இருந்து மீன்பிடி காலத்தில் மீனவர்கள் விசைப்படகுகளில் கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு சென்று மாதக்கணக்கில் தங்கி அரபிக்கடலில் ஆழ்கடலில் மீன்பிடி தொழில்செய்துவிட்டு தங்கள் கிராமங்களுக்கு திரும்புவது வழக்கம்.

இவ்வருடமும் இதே போன்று மீனவர்கள் மேற்படி மாநிலங்களுக்கு மீன்பிடித்தொழிலுக்கு சென்று மீன்பிடித்து வந்துள்ளனர். சென்ற வாரம் உருவான பியான்' புயலில் அரபிக்கடல் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவப்படகுகள் புயலில் சிக்கி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என உடனடியாக அறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் கலெக்டர், காவல்துறையினர் மற்றும் மீன்வளத்துறையினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களின் உறவினர்கனை தொடர்பு கொண்டும், மேற்படி மாநிலங்களின் மீன்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டும் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் குறித்த தகவல்களை கேட்டறிந்ததில் 8 கிராமங்களை சேர்ந்த 327 விசைப்படகுகள், ஆழ்கடல் மீன்பிடித்தொழிலுக்காக மேற்படி மாநிலங்களுக்குச் சென்றதாக தெரியவந்தது.

அவர்களுள் புயலின்போது 300 மீன்பிடி படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் 16 படகுகளில் மீன்பிடிக்கச்சென்றவர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை கிடைத்த தகவல்களில் 11 படகுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் 8 மீனவர்கள் மட்டும் இப்புயல் காரணமாக காணாமல் போய் உள்ளதாகவும் தெரிய வருகிறது. இதுபற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

காணாமல் போன மீனவர்கள் குறித்து கடலோர காவல்படையினர் மற்றும் அந்தந்த மாநில காவல்துறையினர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது குறித்து தேவையான நடவடிக்கைகளை அரசுதொடர்ந்து எடுத்து வருகிறது. இது பற்றிய பதற்றமான செய்திகளை ஏடுகளில் வெளியிடுவதை அல்லது வாய்மொழியாக பரப்புவதை தவிர்க்க வேண்டுமென்று தொடர்புடைய அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 மீனவர்கள் கோவா அருகே மீட்பு

இதற்கிடையே, கடலில் மீன் பிடிக்க சென்ற போது, புயலில் சிக்கி தத்தளித்த படகில் பயணம் செய்த 11 மீனவர்கள் கோவா அருகே மீட்கப்பட்டனர். அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள்.

காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில், குட்டி விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிவேக ரோந்து கப்பல்களில் கடலோர காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் புயலில் சிக்கி தத்தளித்த படகில் பயணம் செய்த 11 மீனவர்கள் கோவா அருகே மீட்கப்பட்டனர். அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள்.

குமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த மீனவர் ஜோஸ் என்பவருக்கு சொந்தமான படகு கடந்த 10-ந்தேதி கடலில் சென்றது. அப்போது புயலில் சிக்கியது. காற்று வீசிய வேகத்தில் படகுக்குள் தண்ணீர் புகுந்து மோட்டார் இயங்காமல் நடுக்கடலில் தத்தளித்தது.

இதனால் ஜோஸ் உள்பட 11 பேரும் கரைக்கு வரமுடியாமல் தத்தளித்து கொண்டு இருந்தனர். ஏறத்தாழ 4 மணி நேரம் கடலில் தந்தளித்து அவர்களை கோவா அருகே மற்றொரு படகில் வந்தவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் ரெயில் மூலம் நேற்று காலை சொந்த ஊருக்கு திரும்பினார்கள். அவர்களில் ஜோஸ், விஜு (20), ஜுட்ஸ் (28), ஜாக்சன்ராஜ் (18) ஆகிய 4 பேரும் தூத்தூரை சேர்ந்தவர்கள். மற்ற 7 பேர் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பொழியூரை சேர்ந்தவர்கள்.

அவர்களைப் பார்த்ததும் குடும்பத்தினர் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். மனைவி, குழந்தைகள் அவர்களை ஆரத்தழுவி ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.

ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச்சென்ற குமரி மாவட்ட விசைப் படகுகளில் பெரும்பாலானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 7 விசைப் படகுகள் குஜராத் அருகே புயலில் சிக்கி நடுக்கடலில் மூழ்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றில் ஒரு படகில் சென்ற 3 பேர் கோவா மீனவர்களால் காப்பாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே படகில் சென்ற 7 பேரின் நிலை என்ன? என்று தெரியவில்லை. மற்றொரு படகில் சென்ற மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் 16 படகுகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது. அந்த படகுகள் என்ன ஆனது? அவற்றில் இருந்த மீனவர்களின் கதி என்ன? அவர்கள் சென்ற படகுகள் எங்கிருக்கிறது? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள், கப்பல்கள் மூலம் அவற்றை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+