Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லட்சத் தீவுக்கு நகர்ந்தது புயல் சின்னம்- தமிழகத்தில் மழை ஓய்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: குமரிக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நகர்ந்து அரபிக் கடலுக்குப் போய் விட்டது. தற்போது அது லட்சத்தீவுப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட கிழக்குப் பருவமழையின் 2வது கட்ட மழை கடந்த 2 நாட்களாக தமிழகத்தை வெள்ளக்காடாக்கியது.

இந்த நிலையில், தற்போது மழை பெருமளவு ஓய்ந்துள்ளது. இதற்குக் காரணம், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அரபிக் கடலுக்குப் போய் விட்டதுதான்.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் இன்று தெரிவிக்கையில், கிழக்கு அரபிக் கடலின் மீது, கேரளா- கர்நாடகா, கோவா கடற்கரைக்கு அப்பால் தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலை கொண்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தி்ல் படிப்படியாக மழையின் அளவு குறையும்.

நேற்று தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. ஆனால் அடுத்த 48 மணி நேரத்தில் (இன்று காலை தொடங்கி) தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஓரளவே மழை இருக்கும்.

சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை இருக்கலாம் என்றார்.

இதுவரை 96 பேர் பலி...

இதற்கிடையே, மழையால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் 96 ஆக அதிகரித்துள்ளது.

முதல் கட்ட மழைக்காலத்தில், 89 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பெய்த 2வது கட்ட மழைக்கு 7 பேர் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து பலி எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் வீட்டுச் சுவற்றுக்கு வெளியே கட்டி வைக்கப்பட்டிருந்த நான்கு ஆடுகள், ஒரு நாயும் இதில் உயிரிழந்தன.

கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை ஆரியங்கோடு பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (60), காவலாளி. இவர் குழித்துறை ஜங்சனில் உள்ள ஒர்க்ஷாப்பில் தனது மோட்டார் சைக்கிளை பழுது பார்க்க விட்டு, விட்டு காத்து இருந்தார். அப்போது ஒர்க்ஷாப் அருகே இருந்த கல் சுவர் இடிந்து விழுந்து நல்லதம்பி இறந்தார்.

களுவன் திட்டை ஆர்.சி. தெருவை சேர்ந்த ஜான் (45). என்பவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

நெல்லை மாவட்டத்தில் பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிர் இழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள பன்னீர்வாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (35). வாத்து மேய்ப்பவர். சசிகலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சீனிவாசன் சோத்துப்பாக்கம் வயல்வெளி பகுதியில் வாத்துக்களை மேய்த்து கொண்டு இருந்தபோது இடிமின்னலுடன் மழை பெய்தது.

அப்போது மின்னல் தாக்கியதில் சீனிவாசன் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சென்னையில்...

சென்னையில் நேற்று இரவு புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்யவில்லை. அதேபோல நகரிலும் கூட லேசான தூறல்தான் காணப்பட்டது.

இன்று காலை முதல் வானம் வெறிக்கத் தொடங்கியது. நல்ல வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. சுத்தமாக மழை இல்லை.

பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

இதற்கிடையே, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குமரியில் பெரும் மழை...

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெரும் மழை கொட்டித் தீர்த்து விட்டது.

நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அதிகபட்சமாக கொட்டாரத்தில் 21 செ.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. நாகர்கோவில் வைத்தியநாதபுரம், அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் தேரூர், பறக்கை கல்குளம் தாலுகாவில் முட்டம் ரீத்தாபுரத்தில் கணேசபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் வசித்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வற்றியதை தொடர்ந்து பள்ளியில் தங்க வைக்கப்பட்டவர்கள் நேற்று காலை வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

அகஸ்தீஸ்வரம் தாலுகா நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் 3 வீடுகள் மழை காரணமாக இடிந்து விழுந்தன. ராஜாக்கமங்கலம் நீண்டகரை பி கிராமத்தில் 4 வீடுகளும், கம்பளம் தெரு, இடலாக்குடி, வடசேரி, சொத்தவிளை, புத்தளம் அருகே உள்ள அரிய பெருமாள்விளை காலனி ஆகிய பகுதிகளில் தலா ஒரு வீடும் மற்றும் சவேரியார் கோவில் அருகே ஒரு வீடும் என 13 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

கல்குளம் தாலுகா லட்சுமிபுரத்தில் ஒரு வீடும், கணேசபுரத்தில் 2 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் குழித்துறையில் ஒரு கடை சுவரும், தோவாளை தாலுகாவில் தாளக்குடியில் 3 வீடும், பூதபாண்டியில் ஒரு வீடு உள்பட 25 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

ராஜாக்கமங்கலம் நீண்டகரையில் வீடு இடிந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மாவட்டத்தில் மழை அதிகம் பெய்ததால், குளங்களும் நிரம்பி வருகின்றன. பறக்கை குளத்தில் மறுகால் பகுதியில் சிறிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..

இதற்கிடையே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

பூண்டி ஏரி நீர்மட்டம் 29.41 அடி (முழு கொள்ளளவு 35 அடி). இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று 42.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 475 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சோழவரம் ஏரி நீர்மட்டம் 12.12 அடி (17.86 அடி). ஏரிப் பகுதியில் 78 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 325 கனஅடி தண்ணீர் வருகிறது.

புழல் ஏரிப் பகுதியில் 12.86 அடி (21.02 அடி). புழல் ஏரிப் பகுதியில் 103 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 1,280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 14.9 அடி (24 அடி). ஏரிப் பகுதியில் 47 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 479 கனஅடி தண்ணீர் வருகிறது.

வீராணம் ஏரி நீர்மட்டம் 5.5 அடி (முழு கொள்ளளவு 8.5 அடி). ஏரிக்கு வினாடிக்கு 2070 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+