நீலகிரி-1,869 குடும்பங்களுக்கு 15 நாளில் தற்காலிக வீடுகள்
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 1,869 குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் 15 நாட்களுக்குள் கட்டித் தரப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் புதையுண்டன. சுமார் 53 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் மழைச் சேதம் குறித்து முதல்வர் கருணாநிதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதில், நீலகிரி மாவட்டத்தில் சேதமடைந்துள்ள வீடுகளுக்குப் பதிலாக உடனடியாக தற்காலிக வீடுகள் கட்டுவது என்று முடிவெடு்க்கப்பட்டது.
முழுவதுமாக சேதமடைந்த வீடுகள் அனைத்தையும் மாற்றி புது வீடுகள் கட்டுவதற்கு சுமார் 6 மாத காலம் ஆகும் என்பதால் உடனடியாக தற்காலிக வீடுகள் கட்டித் தருவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த தற்காலிக வீடுகள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 15 நாட்களுக்குள் கட்டப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 70,000 வரை வீதம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதும் தற்போது முகாம்களில் தங்கியுள்ள வீடுகளை இழந்த குடும்பங்களை குடியமர்த்த போர்க்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
அடுத்த ஆறு மாத காலத்திற்குள் இவர்களுக்கு நிரந்தரமான புதிய வீடுகளைக் கட்டித் தரவும் உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
