அரசு வீட்டைக் காலி செய்ய பொன்சேகாவுக்கு உத்தரவு - வாடகை வீடு கிடைக்காமல் அவதி

இலங்கை கூட்டுப் படைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டார் பொன்சேகா. அவரை உடனடியாக பணியிலிருந்து விடுவித்து விட்டது ராஜபக்சே அரசு.
இந்த நிலையில் அவர் தற்போது குடியிருந்து வரும் அரசு வீட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமைக்குள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது அரசு. இதைத் தொடர்ந்து அவர் வாடகைக்கு வீடு பார்க்கத் தொடங்கியுள்ளார்.
ஆனால் தனக்கு வீடு தரக் கூடாது என வீட்டு உரி்மையாளர்களை சிலர் மிரட்டி வருவதாக பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
புல்லர்ஸ் வீதியில் உள்ள அரசு வீட்டையும் அங்குள்ள அனைத்துத் தளவாடங்களையும் ஒப்படைக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் பொன்சேகாவுக்கு உத்தரவிட்டுள்ளதாம்.
இதையடுத்தே அவர் வாடகைக்கு வீடு பார்க்கத் தொடங்கியுள்ளார். தான் இதுவரை 15 வீடுகளைப் பார்வையிட்டுள்ளதாகவும், இந்த வீடுகளின் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் மிரட்டப்படுவதனால் வீடு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளாக பொன்சேகா கூறியுள்ளார்.
பொன்சேகா மனைவியும் விலகல்
இதற்கிடையே, பொன்சேகாவின் மனைவி அனோமா தான் வகித்து வந்த படை வீரர் நலத் திட்ட அதிகார சபையின் தலைவி பதவியிலிருந்து விலகி விட்டார்.
பொன்சேகாவை சமாதானப்படுத்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்தப் பதவியை அனோமாகவுக்குக் கொடுத்தார் ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார் அனோமா.
அனோமா ஏற்கனவே வகித்து வந்த ஊனமுற்ற படை வீரர்களின் குழந்தைகள் பராமரிப்பு நிதியத்தின் பதவியை திடீரென அரசு நீக்கியதைத் தொடர்ந்து அதிருப்தி அடைந்த அனோமா இந்த விலகல் முடிவை எடுத்துள்ளாராம்.
பொன்சேகாவுக்கு ரணில் நிபந்தனை
இந் நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க் கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட வேண்டுமானால் சரத் பொன்சேகா சில நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
அந்த நிபந்தனைகள் என்ன என்பதை அவர் விளக்கவில்லை.
தேர்தல்..இலங்கை அமைச்சரவை தயக்கம்:
இந் நிலையில் அதிபர் தேர்தல் தேதி குறித்து முடிவு செய்ய கொழும்பில் நேற்று நடந்த இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இது குறித்து செய்தித்துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷசனா யெபா கூறுகையில்,
அதிபர் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் நடக்கவுள்ளன. இதில், எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு எட்டப்படவில்லை. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும்.
தேர்தல் தேதிக்கான இறுதி முடிவை, அதிபர் ராஜபக்ஷே விரைவில் அறிவிப்பார். தேர்தலில் எதிர்க்கட்சிகள் கொடுக்கும் எந்த சவாலையும் எதிர்கொள்வதற்கு நாங்கள் தயார் என்றார்.












Click it and Unblock the Notifications