கசாப்பை தூக்கிலிடுங்கள்: சோனியாவை சந்தித்து கர்கரே மனைவி கோரிக்கை

மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின்போது உயிரை துச்சமென மதித்து தீவிரவாதிகளுடன் சண்டை போடுவதற்காக விரைந்த ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட 3 உயர் அதிகாரிகள் அநியாயமாக தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இரையானார்கள்.
இந்த துயரச் சம்பவம் நடந்து இன்னும் 3 நாட்களில் ஒரு வருடமாகப் போகிறது. இந்த நிலையில், கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலேஸ்கரின் மனைவி ஸ்மிதா சலேஸ்கர் ஆகியோர் இன்று சோனியா காந்தியை சந்தித்துப் பேசினர்.
தங்களது கணவர்கள் கொல்லப்பட்ட பின்னர் தாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள், மன உளைச்சல்கள் குறித்து அவர்கள் சோனியாவிடம் முறையிட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கவிதா கர்கரே பேசுகையில், நாங்கள் அவரிடமிருந்து சில உறுதிமொழிகளைப் பெற்றுள்ளோம். எங்களுக்கு ஆதரவாகப் பேசினார். சந்திப்பு முழுவதும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார். உயிர்த் தியாகம் செய்த அனைத்து தியாகிகளின் குடும்பத்தினரும் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து அவருடன் விவாதித்தோம்.
நாங்கள் அவரிடம் பேசிய தனிப்பட்ட விஷயங்கள் குறித்து வெளியில் சொல்ல முடியாது. எங்களுக்கு பெரிய அளவில் எந்த வருத்தமும், புகாரும் இல்லை என்றார்.
இருப்பினும் இந்த சந்திப்பின்போது சம்பவம் நடந்து ஒரு வருடமாகியும் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தண்டிக்காமல் வைத்திருப்பது குறித்து கவிதாவும், ஸ்மிதாவும், சோனியாவிடம் அதிருப்தியைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், கசாப்பை உடனடியாக தூக்கிலிட வேண்டும் எனவும் இருவரும் கோபத்துடன் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர, தரக்குறைவான புல்லட் புரூப் உடைகள்தான் தங்களது கணவர்களின் உயிரைப் பறித்ததாகவும் அவர்கள் வேதனைப்பட்டுக் கூறியதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications