மாவீரர் தினம்-இலங்கை முழுவதும் படைகள் உஷார்
கொழும்பு: மாவீரர் நாள் நெருங்குவதையொட்டி இலங்கை முழுவதும் பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரபாகரனை ஒழித்துவிட்டோம் என்று வெளியில் கூறிக் கொண்டாலும், உள்ளுக்குள் உதறலோடுதான் இருக்கிறது இலங்கை ராணுவம்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் (நாளை) நவம்பர் 26ம் தேதி வருகிறது. அதற்கு அடுத்த நாளான 27ம் தேதி போரில் உயிர் நீத்த போராளிகளுக்கு புலிகள் அஞ்சலி செலுத்தும், மாவீரர் நாள் வருகிறது.
மாவீரர் நாள் உரை குறித்து பல்வேரு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து இலங்கை முழுவதும் படையினர் உஷார்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கடற்படையினர் மிகுந்த உஷார் நிலையில் உள்ளனராம். கடல் முழுவதும் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதி சிங்கள ராணுவ வீரர்களிடம் ஏற்பட்டுள்ளது. கடல் வழியாக ஊடுருவி வந்து தற்கொலை தாக்குதல் நடத்தக்கூடும் என்று சிங்கள உளவுத்துறையும் அச்சம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து சிங்கள ராணுவத்தின் முப்படைகளையும் தயார் நிலையில் வைத்து இருக்குமாறு பாதுகாப்பு செயலர் கோதபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
வன்னி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை தோற்கடித்து விட்டோம் என்று சிங்கள அரசு கூறி வருகின்ற போதிலும் அவர்களை நினைத்து பயந்து கொண்டே இருப்பது முப்படைகளையும் உஷார்படுத்தி இருப்பதன் மூலம் உறுதியாகி உள்ளது.
ஆட்களே இல்லாத, தமிழரின் மாபெரும் சுடுகாடாகக் காட்சி தரும் வன்னிப் பிரதேசத்தைக் காக்க முன்னிலும் அதிக படையணிகளைத் தருவித்துள்ளதாம் ராணுவம்.


Click it and Unblock the Notifications
