மும்பை தாக்குதல்: அத்வானி-பிரணாப் மோதல்
டெல்லி: மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் ஓராண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு நாடே அஞ்சலி செலுத்திய நிலையில் இந்தப் பிரச்சனை
தொடர்பாக மக்களவையில் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் மோதலில் ஈடுபட்டார் பாஜக தலைவர் அத்வானி.
மக்களவையில் கேள்வி நேரத்துக்குப் பின் மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவரான அத்வானி, மும்பை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் போய்ச் சேரவில்லை என்றார்.
அதற்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். நீங்கள் இந்த விஷயத்தில் கூட
அரசியல் லாபம் தேடுகிறீர்கள். முன்பும் இதேபோன்று பயங்கரவாத பிரச்னையை பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட முயன்றீர்கள். அதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டிவிட்டார்கள். மீண்டும் அப்படியே நடந்து கொண்டால் தக்க பதில் கொடுப்பார்கள் என்றார்.
பிரணாப் முகர்ஜியின் இந்தப் பேச்சுக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
முன்னதாக இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
போலீசார் குடும்பங்களுக்கு பெட்ரோல் பங்க்:
இந் நிலையில் மும்பையில் நேற்று நடந்த விழாவில், தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான 5 போலீசாரின் குடும்பங்களுக்கு பெட்ரோல் பங்க், சமையல் கியாஸ் ஏஜென்சி நடத்துவதற்கான அனுமதியை உள்துறை அமைச்சர ப.சிதம்பரம் வழங்கினார்.
தாக்குதலின் போது உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு படையினர் 18 பேரின் குடும்பங்களுக்கு பெட்ரோல் பங்க், சமையல் கியாஸ் ஏஜென்சி ஆகியவை நடத்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 5 பேருக்கு உரிமம் தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications