தமிழகம் முழுவதும் பிரபாகரன் படங்களை அகற்ற வேண்டும்- இளங்கோவன்
மதுரை: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை பல இடங்களில் வைத்து உள்ளனர். ஆனால் சில இடங்களில் மட்டுமே அப்படத்தை போலீஸார் அகற்றி உள்ளனர். அவற்றை முழுமையாக அகற்ற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
மதுரை வந்த அவர் அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னையில் எனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸாரின் விரைவான நடவடிக்கை பாராட்டுக்குரியது.
கைதானவர்கள் அனைவரும் குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. எனவே அவர்களைத் தூண்டியவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
பெட்ரோல் குண்டு வீச்சுக்குப் பிறகு எனக்குப் பாதுகாப்பு கோரவில்லை. ஆனால், போலீஸாரே முன்வந்து எனக்குப் பாதுகாப்பை அளித்துள்ளனர். இதற்காக தமிழக முதல்வருக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தீவிரவாதத்தை ஆதரிக்கும் வகையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை பல இடங்களில் வைத்து உள்ளனர். சில இடங்களில் மட்டுமே அப்படத்தை போலீஸார் அகற்றி உள்ளனர். எனவே தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ தீவிரவாதத்தை முழுவதுமாக தடுக்கவேண்டும்.
தீவிரவாதத்தை ஆரம்பத்திலேயே அழிக்காவிட்டால் காஷ்மீர், அசாம், பிகார், மேற்குவங்கம் போல தீவிரவாதிகளது ஆதிக்கம் அதிகமுள்ள இடமாக தமிழகம் மாறி விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழர்கள் கொல்லப்படக் கூடாது. அவர்கள் நலமோடு வாழவேண்டும் என்பதில் மத்திய அரசும், மாநில அரசும் அக்கறையும், உறுதியும் கொண்டுள்ளன. அதே சமயம் தீவிரவாதம் பரவிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும்.
தமிழக மீனவர்கள் பாதிக்கப்படக் கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசுக்கும் கோரிக்கையை அனுப்பியுள்ளோம். அதன்படி விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். எந்த மாதிரியான நடவடிக்கை என்பதை அதிகாரிகள் விளக்குவார்கள் என்றார் அவர்.
மதுரையில் தனிப்படை வேட்டை...
இதற்கிடையே, இளங்கோவன் வீட்டில் பெட்ரோல் வீசியது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வரும் மதுரையைச் சேர்ந்த பொறியாளர் விஜயக்குமாரைக் கைது செய்ய ஒரு தனிப்படை மதுரை வந்தது.
எஸ்.எஸ்.காலனி துரைச்சாமி நகரில் விஜயக்குமார் வீடு உள்ளது. இங்கு தனிப்படையினர் வந்தபோது வீட்டில் விஜயக்குமார் இல்லை.
இதையடுத்து விஜயக்குமார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மதுரையில் முகாமிட்டுள்ள அவர்கள் விஜயக்குமாரைப் பிடிக்க தேடி வந்தனர்.
விஜயக்குமார் சரண்:
இந் நிலையில் விஜயக்குமார் இன்று சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் சரணடைந்தார்.
அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து விஜயக்குமார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சரணடைந்த விஜயக்குமார், நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆவார்.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக உதவி இயக்குநர் மித்ரன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசவிரோதிகள்: நாராயணசாமி...
இந் நிலையில் விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீது தமிழக, புதுச்சேரி அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய திட்டத் துறை இணையமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து தமிழகத்திலும்,புதுச்சேரியிலும் ஒரு சில அரசியல்வாதிகளும் ஒரு சில அமைப்பினரும் பேசி வருகின்றனர்.
பல முறை கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்தப் பிறகும் தொடர்ந்து வைகோ விடுதலைப் புலிகளை ஆதரித்து வருகிறார். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அவர்கள் தேச விரோதிள். எனவே, அவர்கள் மீது தமிழக, புதுச்சேரி அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இளங்கோவன் வீடு மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்துள்ளார்.
அதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்போர் மீது தேச விரோத சட்டம் பாய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications